உள்ளடக்கத்திற்கு செல்ல

வெள்ளி முதலீடு: விலை குறைவதற்காக காத்திருக்கலாமா?
வெள்ளி முதலீடு: விலை குறைவதற்காக காத்திருக்கலாமா?
ADDED : ஜன 20, 2026 02:01 AM

அ நிறம் | அளவு
இந்தியாவில் உள்ள மல்டி கமாடிட்டி சந்தையில் வெள்ளி இதுவரை இல்லாத அளவாக 1 கிலோ 3 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. ஆபரண வெள்ளியோ அதைவிட அதிகமாக, நேற்று 1 கிலோ 3.18 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளியில் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும், இப்போது முதலீடு செய்யலாமா, என்பது குறித்து கமாடிட்டி நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கைகளால், உலக அளவில் அரசியல் பதற்றங்கள் தொடர்கின்றன. இதன் காரணமாக, வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். மேலும், ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும், பாதுகாப்புக்கும் அவசியமாக கருதப்படும் 'கிரிட்டிக்கல் மினரல்ஸ்' என அழைக்கப்படும் முக்கியமான கனிமங்களின் பட்டியலில் வெள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணம்.
முன்பு தொழில்துறை பயன்பாட்டுக்காக மட்டுமே அதிகம் பயன் படுத்தப்பட்ட வெள்ளி, இப்போது முதலீட்டாளர்களையும் அதிகமாக ஈர்க்கிறது. வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் விலை 3.20 லட்சம் ரூபாய் முதல் 3.25 லட்சம் வரை செல்ல வாய்ப்புள்ளது. ஏற்கனவே வெள்ளியில் முதலீடு செய்தவர்கள், இந்த விலை உயர்வை பயன்படுத்தி லாபத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்போது புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், விலை சற்று குறையும் வரை காத்திருப்பது நல்லது.
-ஞானசேகர் தியாகராஜன். கமாடிட்டி நிபுணர்
மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் போன்றவற்றில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், தேவை அதிகரித்து விலை உயர்கிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு, 'ஷார்ட் கவரிங்' நடவடிக்கைகளால் நிகழ்ந்திருப்பதாக நான் பார்க்கிறேன். இந்த சூழ்நிலையில், சிறு முதலீட்டாளர்கள் உடனடியாக வெள்ளியில் வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒரே நேரத்தில் முழுத் தொகையையும் முதலீடு செய்வதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது அல்லது விற்பது பாதுகாப்பானது. நீண்டகால முதலீட்டாளர்கள், தங்களிடம் உள்ள வெள்ளி முதலீடுகளை தொடர்ந்து வைத்திருக்கலாம்.
-ஷியாம் சுந்தர். கமாடிட்டி நிபுணர்
