ADDED : ஜன 02, 2026 01:06 AM

நீர் உட்கட்டமைப்பு துறையை சேர்ந்த 'வி.ஏ., டெக் வாபெக்' நிறுவனம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாக 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனம் அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் 1924ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் 1996ல் தனது செயல்பாடுகளை துவங்கியது.
நகராட்சி மற்றும் தொழில்துறை துறைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு, கடல்நீரை குடிநீராக்குதல் மற்றும் நீர் மறுசுழற்சி போன்றவற்றிற்கான முழுமையான தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்ட டிசம்பர் 30, 2025 தேதியிட்ட கம்பெனி அப்டேட் அறிக்கையில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள், வலுவான ஆர்டர் புத்தகம் மற்றும் வலுவான நிதி நிலைமை போன்றவை நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பலம் 16,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் கையில் உள்ளன. இது, அடுத்த 3-4 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் 15-20 சதவீதம் வளர்வதை உறுதி செய்கிறது.
சமீபத்தில் சவுதி அரேபியாவில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், நேபாளத்தில் மிகப்பெரிய நீர் சுத்திகரிப்பு திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது.
சென்னையில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் (நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர்) இதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிதிநிலை அறிக்கை இந்நிறுவனம், தற்போது கடன் ஏதும் இல்லாமல் வலுவான நிதிநிலையுடன் இருக்கிறது.
குறைந்த லாபம் தரும் பழைய திட்டங்களை கைவிட்டு, அதிக லாபம் தரும் தொழில்துறை நீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனத்தின் லாப வரம்பு 13-15 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு பார்வை வலுவான ஆர்டர் புத்தகம், முன்னணி தொழில்நுட்பம், லாபகரமான திட்ட செயல்பாடுகள் மற்றும் கடன் இல்லாத வலுவான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, இந்நிறுவன பங்குகளை மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வாங்கலாம் என பரிந்துரைத்துள்ளது. வி.ஏ. டெக் வாபெக் நிறுவன பங்குகள் 1,900 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக மோதிலால் ஓஸ்வால் தெரிவித்துள்ளது.

