இரவில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் ஆய்வறிக்கை சொல்லும் ஆச்சரிய தகவல்
இரவில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் ஆய்வறிக்கை சொல்லும் ஆச்சரிய தகவல்
ADDED : நவ 13, 2025 12:01 AM

'டே டிரேடிங்'கை பொறுத்தவரை, லாபத்தை விட நஷ்டமே அதிகம் என பல ஆய்வுகள் சொல்கின்றன. நாமும் அதை கேள்விப்படுகிறோம்; பார்க்கிறோம். ஆனால், இரவில் டிரேடிங் செய்தால், கண்டிப்பாக லாபம் உண்டு என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இரவில் எப்படி டிரேடிங் செய்ய முடியும்? பங்கு சந்தைகள் திறந்திருக்காதே?
மாலையில் சந்தை முடிவதற்கு முன், 'நிப்டி 50' அல்லது வேறு ஏதோ ஒரு இண்டக்ஸை வாங்கி வைத்துவிட்டு, அடுத்த நாளில் சந்தை மீண்டும் துவங்கும்போது விற்பனை செய்தால், லாபம் உண்டு என்கிறது அந்த ஆய்வறிக்கை.
இது தொடர்பாக, 'கேப்பிடல் மைண்டு மியூச்சுவல் பண்டு' நிறுவனத்தின் பண்டு மேலாளரான அனுாப் விஜயகுமார் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, பின்வரும் சுவாரசியமான விபரங்களை தெரிவிக்கிறது:
கடந்த 25 ஆண்டுகளில் நிப்டி 50ஐ மாலையில் வாங்கி, மறுநாள் காலையில் விற்பனை செய்திருந்தால், ஒருவரது சொத்து மதிப்பு 100 மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால், சந்தை திறந்திருக்கும் காலை 9:15க்கு வாங்கி, மாலை 3:30 மணிக்குள் விற்பனை செய்திருந்தால், முதலீடு 84 சதவீதம் காணாமல் போயிருக்கும்!
கடந்த 2000ம் ஆண்டு முதல் இதுவரை, நிப்டி 50 குறியீடு 1,592 புள்ளிகளில் இருந்து 23,465 புள்ளிகள் உயர்ந்து, 25,057 புள்ளிகளை தொட்டுள்ளது. ஆனால், இரவில் மட்டுமே இந்த நிப்டி 50 எவ்வளவு உயர்ந்திருக்கிறது தெரியுமா? 39,084 புள்ளிகள். பகல் நேர டிரேடிங்கில் இதே இண்டக்ஸில் 15,620 புள்ளிகள் சரிந்துள்ளன.
இரவு மற்றும் பகல் நேர டிரேடிங்கில் கிடைத்த வருவாய்களுக்கு இடையிலான வேறுபாடும் மிக அதிகம். அதாவது, இரவு நேர டிரேங்கில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.70 சதவீத வருவாய் கிடைத்திருக்க, பகல் நேர டிரேடிங்கில், ஆண்டொன்றுக்கு தோராயமாக 2.4 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது ஏதோ ஓராண்டில் மட்டும் நடந்தது அல்ல. சந்தையின் பல்வேறு ஏற்ற இறக்க ஆண்டுகளிலும் இதே போன்ற வருவாய் தான் வந்துள்ளது.
உதாரணமாக, டாட் காம் சரிவு, சர்வதேச நிதி நெருக்கடி, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அமல், கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு காலகட்டங்களிலும் இதே விதமான வருவாயே கிடைத்துள்ளது.
இந்த இரவு நேர லாபத்தை பெருமளவு ஈட்டுபவர்கள், நிறுவன முதலீட்டாளர்கள்தான். அதாவது, மியூச்சுவல் பண்டுகள், காப்பீடு நிறுவனங்கள், ஓய்வூதிய பண்டுகள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள்தான் இந்த பட்டியலில் வருபவை.------------------
ஒவ்வொரு 10 ஆண்டிலும் கிடைத்த லாப வாய்ப்பு 2000களில்: இரவு நேர டிரேடிங்: 58.60% தடவை பகல் நேர டிரேடிங்: 53.70% தடவை 2010களில்: இரவு நேர டிரேடிங்: 65.40% தடவை பகல் நேர டிரேடிங்: 46.00% தடவை 2020களில்: இரவு நேர டிரேடிங்: 66.70% தடவை பகல் நேர டிரேடிங்: 48.40% தடவை

