ADDED : செப் 17, 2025 03:22 AM

இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக, நேற்று வலுவடைந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சு மற்றும் அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை, இதற்கு முக்கிய காரணங்கள்.
சந்தையில் ஏற்படும் ஏற்ற - இறக்கங்களால், இந்திய ரூபாய் தொடர்ந்து அழுத்தத்தை சந்தித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு பார்வர்ட் சந்தையில் அதன் இருப்பை அதிகரித்து உள்ளது.
அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள புதிய வரிகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளன.
அரசு அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இறால் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டும் கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. அவர்களின் ஆர்டர்களில் பாதி ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சாதகமான காரணிகள் விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த புதிய வரிகள் இல்லையென்றால், உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள், ரூபாய்க்கு மிகவும் சாதகமாக இருந்திருக்கும், ரூபாய் மதிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கக்கூடும்.
உலகளாவிய காரணி கள்: நிதிச் சந்தைகள், புதன்கிழமை நடைபெறவிருக்கும் மத்திய வங்கியின் கொள்கை கூட்டத்தில், 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித குறைப்புக்கு முழுமையாக தயாராகிவிட்டன. இதன் காரணமாக, டாலர் குறியீடு 97.36 ஆகக் குறைந்துள்ளது. இது வளரும் நாடுகளின் நாணயங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.
வர்த்தக பற்றாக்குறை: ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 26.49 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது ஓராண்டுக்கு முன் 29.70 பில்லியன் டாலராக இருந்தது.
எரிபொருள் விலை குறைவு காரணமாக இறக்குமதிகள் 10.10 சதவீதம் சரிந்தன. அதே சமயம், அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் இருந்தபோதிலும், ஏற்றுமதிகள் ஆச்சரியப்படும் விதமாக 6.70 சதவீத வளர்ச்சியைக் கண்டன.
கச்சா எண்ணெய் விலை: ஒபெக் பிளஸ் நாடுகள், உற்பத்தியை மீண்டும் துவங்குவது, அமெரிக்க வர்த்தக கொள்கைகளால் உலகளாவிய தேவை குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாக, கச்சா எண்ணெய் விலை அழுத்தத்தில் உள்ளது.
இது இந்தியாவின் இறக்குமதி செலவைக் குறைத்து ரூபாய்க்கு ஆதரவாக இருக்கிறது.
பேச்சு தீர்மானிக்கும் இந்த வாரத்தில் முக்கிய காரணியாக இருப்பது, டெல்லியில் நடக்கும் அமெரிக்கா- - இந்தியா வர்த்தக பேச்சு. இதில், அமெரிக்காவின் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் இந்திய அதிகாரிகளை சந்திக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டால், அது ரூபாய்க்கு தேவையான ஆதரவை அளிக்கும்.
எதிர்கால பார்வை தற்போது, ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 87.50 முதல் 88.50 வரையிலான வரம்பில் வர்த்தகம் ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரம்பை விட்டு விலகி, எந்த திசையில் சென்றாலும், அது ரூபாயின் மதிப்பில் 40 முதல் 50 பைசா அளவில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், தற்போதைய போக்கு ரூபாயின் மதிப்பு வலுவடைவதற்கு சாதகமாக உள்ளது. குறிப்பாக, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், இந்த நிலை மேலும் வலுப்பெறும்.