UPDATED : ஆக 07, 2026 01:11 AM
ADDED : ஆக 07, 2026 12:43 AM

பங்கு சந்தையின் பெரிய ஏற்ற இறக்கங்களை கண்டு பயப்படும் அதே நேரத்தில், வஙகிகளில் கிடைக்கும் வட்டியை விட கூடுதல் வருமானம் மற்றும் வரி சலுகை பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய தீர்வு ஹைபிரிட் எஸ்.ஐ.எப்., இது எப்படி செயல்படுகிறது, சாதாரண ஆர்பிட்ரேஜ் பண்டுகளைவிட இது எவ்வாறு சிறந்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஆர்பிட்ரேஜ் பண்டும் அதன் வரி சலுகையும்
இந்தியாவில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஆர்பிட்ரேஜ் பண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
*வருவாய் முறை: ஒரே பங்கின் ஸ்பாட் மற்றும் பியூச்சர்ஸ் சந்தைக்கும் இடையே உள்ள சிறிய விலை வித்தியாசத்தை பயன்படுத்தி இவை ஆபத்தின்றி வருமானம் ஈட்டுகின்றன.
* வரி சலுகை: இது பங்கு சந்தை சார்ந்த நிதியாக கருதப்படுவதால், ஒரு ஆண்டிற்கு மேல் முதலீடு செய்தால் 12.50 சதவீதம் மட்டுமே நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. இது சாதாரண 'டெப்ட்' பண்டுகளுக்கு விதிக்கப்படும் வரியை விட மிக குறைவு.
மூன்று கூடுதல் நன்மைகள்
மேலே குறிப்பிட்ட ஆர்பிட்ரேஜ் பண்டின் அதே வரி சலுகையை அப்படியே வழங்கி கொண்டே, 'ஹைபிரிட் எஸ்.ஐ.எப்., மூன்று கூடுதல் பலன்களை சேர்த்து வழங்குகிறது.
*சிறப்பு சூழல் வாய்ப்புகள்: நிறுவனங்களின் இணைப்பு, பிரிவு அல்லது மறுசீரமைப்பு நடக்கும் போது பங்குகளில் ஏற்படும் விலை மாற்றங்களை பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டுகிறது.
* கடன் பத்திர முதலீடு: பாதுகாப்பான கடன் பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்வதன் வாயிலாக நிலையான வட்டி வருவாயை உறுதி செய்கிறது.
* பாதுகாப்பு ஷார்ட் பொசிஷன்: சந்தையில் அதிக விலை மதிப்பிடப்பட்ட பங்குகள் சரிவடையும் போது, 25 சதவீத 'ஷார்ட் பொசிஷன்' நுட்பத்தை பயன்படுத்தி இழப்பை தடுத்து லாபமாக மாற்றுகிறது.
'பீட்டா' என்றால் என்ன?
* ஒட்டுமொத்த பங்கு சந்தையின் நகர்வுக்கு ஏற்ப, நீங்கள் செய்த முதலீட்டின் மதிப்பு எந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்தை சந்திக்கிறது என்பதை அளவிடும் குறியீடே 'பீட்டா' ஆகும்.
* ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தின் பீட்டா அளவு 1ஆக இருந்தால், அது பங்கு சந்தையின் நகர்வுக்கு ஏற்ப ஏற்ற இறக்கம் அடையும். பீட்டா அளவு அதிகமாக உள்ள பண்டுகள், சந்தை உயரும் போது அதிக லாபத்தையும், சந்தை சரியும் போது மிக கடுமையான நஷ்டத்தையும் உண்டாக்கும்.
* சாதாரண ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளுடன் ஒப்பிடும் போது, ஹைபிரிட் எஸ்.ஐ.எப்., திட்டங்கள் இயல்பாகவே மிக குறைந்த பீட்டா அளவை கொண்டுள்ளன. இதிலுள்ள ஷார்ட் பொசிஷன் மற்றும் ஆர்பிட்ரேஜ் ஆகியவை, சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அதிர்வுகளையும் பாதிப்புகளையும் பெருமளவில் குறைத்து விடுகின்றன.
![]() |
*பாதுகாப்பான கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்து பழகிய ஒருவர், முதன்முறையாக பங்கு சந்தை சார்ந்த முதலீட்டு திட்டங்களுக்குள் அடி எடுத்து வைக்கும் போது, இந்த குறைந்த பீட்டா என்பது அவரது முதலுக்கு ஒரு பலமான பாதுகாப்பாகவே செயல்படுகிறது.
* இப்படி சொல்லலாம், சந்தை கடலை போல சீறினாலும், ஹைபிரிட் எஸ்.ஐ.எப்., திட்டத்திலுள்ள 'ஷார்ட் மற்றும் ஆர்பிட்ரேஜ்' உத்திகள் அதன் அலையை அடக்கி, முதலீட்டு தொகையை பெரிய ஏற்ற இறக்கங்கள் இன்றி பத்திரமாக பாதுகாக்கின்றன.

