ADDED : அக் 23, 2025 12:14 AM

இந்தியாவின் பங்குச் சந்தை வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், நிறுவனங்களை ஐ.பி.ஓ.,வுக்கு தயார் செய்யும் ஆலோசகர்களுக்கான தேவை, இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. இவர்கள் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருந்து, பல்வேறு நடைமுறைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, புதிய பங்கு வெளியீடுக்கு வர உதவிபுரிகின்றனர்.
முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் மூலதனச் சந்தை வழக்கறிஞர்களிடமிருந்து ஐ.பி.ஓ., ஆலோசனை நிறுவனங்கள் வேறுபட்டு நிற்கின்றன. இவை பட்டியல் இடப்படாத நிறுவனங்களை, சந்தையின் கடுமையான நிபந்தனைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் தயார் செய்கின்றன.
தேவை அதிகரிக்க காரணம்: கடந்த சில ஆண்டுகளாக புதிய பங்கு வெளியீடு வாயிலாக மூலதன திரட்டல் அதிகரிப்பு, கணிசமாக உள்நாட்டு, அன்னிய முதலீடு அதிகரிப்பு ஆகியவை ஆலோசகர்களின் தேவையை அதிகரித்துள்ளது. ஐ.பி.ஓ.,வுக்குத் தயாராகும் நிறுவனங்களிடம், பொதுச் சந்தை குறித்த நிபுணத்துவம் குறைவாக உள்ளது மற்றொரு காரணமாகும்.
முக்கிய சவால்கள் 1 நிதி அறிக்கை சிக்கல்கள், தரவுகளின் தரம் மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளை வழங்குவதில் நிறுவனங்கள் சிரமங்களை சந்திப்பது.
2 பட்டியலிடப்படாத நிறுவனங்கள் முறையான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதில்லை. இதனால் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான கடுமையான நிர்வாக மற்றும் கட்டுப்பாடு கட்டமைப்புகளுக்கு மாறுவதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்கின்றன.
3 ஐ.பி.ஓ., வருவதற்கு, வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள், தணிக்கை யாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆனால், நிறுவனங்கள் அத்தகைய தயார் நிலையில் இல்லாதது.
ஆலோசகர்களின் பங்களிப்பு: இந்தியாவில் நிறுவனங்களுக்கான ஐ.பி.ஓ., ஆலோசகர்கள் சேவைகளை, ராதி அட்வைசர்ஸ், யூனிக்வஸ் கன்சல்டெக் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன.
புதிய பங்கு வெளியீடு என்பது ஒரு நிதிப் பரிவர்த்தனை மட்டுமல்ல, நிதி, இடர் மேலாண்மை மற்றும் நிர்வாக செயல்பாடுகளின் மாற்றம் என அனைத்தையும் உள்ளடக்கியது.
நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பொது நிறுவனங்களாக பட்டியலிடப்படுவதற்கு முன், வலுவான நிர்வாகம், துல்லியமான நிதிநிலை அறிக்கை மற்றும் வெளிப்படையான நிர்வாகத் திறனுடன் இருப்பதை இந்த ஆலோசகர்கள் உறுதி செய்கின்றனர்.
நிறுவனங்களை ஐ.பி.ஓ.,வுக்கு தயார் செய்யும் ஆலோசகர்களுக்கான தேவை, இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது