UPDATED : மார் 30, 2026 03:50 AM
ADDED : மார் 30, 2026 03:29 AM

நிழலா நிஜமா? பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடும் நேரம் இது. விடுமுறை பயண காப்பீடு குறித்து தெரிந்துகொள்ள இதுதான் சரியான தருணம்.
அதிகமாக மக்கள் அறிந்திராத ஒரு இன்சூரன்ஸ் பாலிசி, 'டிராவல் இன்சூரன்ஸ்' என்பது. பழைய காலத்தில் இதை, 'ஓவர்சீஸ் மெடிகிளைம் பாலிசி' என்று கூறுவர்.
அப்போது, பொது இன்சூரன்ஸ் துறையில் அரசு கம்பெனிகள் மட்டும் இருந்தன. மெடிகிளைம் என்பது அவர்களுடைய ஆஸ்பத்திரி பாலிசிக்கான பிராண்ட் நேம்.
![]() |
ஓவர்சீஸ் மெடிகிளைம் பாலிசி என்பதும் அவர்களது பாலிசி தான். இந்த பெயர் சற்று குழப்பமானது; ஏனென்றால், இது ஆஸ்பத்திரி செலவு பாலிசி மட்டுமல்ல. இது ஒரு பேக்கேஜ் பாலிசி.
அதாவது, சில குறிப்பிட்ட கவரேஜ்களை ஒருங்கிணைத்து ஒரு பாலிசியாக வழங்கக்கூடிய ஒரு காம்போ பாலிசி. பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் வந்ததால், பலவிதமான பெயர்கள் கொண்ட பாலிசியாக இது புது உருவம் பெற்றது. டிராவல் இன்சூரன்ஸ் என்பது பொதுவான ஒரு பெயர்.
என்னென்ன அடங்கும்? வெளிநாட்டில் பயணிக்கும்போது ஏற்படும் அவசர மருத்துவ செலவுகளுக்கு கவரேஜ் இதில் முக்கிய அங்கம். இதுதவிர, பாஸ்போர்ட் தொலைந்து போனால், விமானம் கேன்சல் ஆனால் அல்லது தனிப்பட்ட முறையில் ஏதாவது சட்டரீதியான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், என்று சில வகை இன்சூரன்ஸ்கள் சேர்ந்த ஒரு காம்போ பாலிசி.
சரி, விடுமுறை பயண காப்பீடு பாலிசி என்பது நிழலா? நிஜமா? என்று ஏன் விவாதிக்கிறோம்?
முக்கியமான காரணம் உண்டு. இன்சூரன்ஸ் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதவர்கள் கூட, “சின்ன எழுத்துல எழுதறாங்க மேடம். அதை காட்டி கிளைம் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க,” என்று கூறுகிறார்கள்.
இன்சூரன்ஸ் பற்றி அவர்களும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது!
நிழல் எது? நிஜம் எது? டிராவல் பாலிசியில் ஐந்து லட்சம் டாலர் கவரேஜ் என்று கூறுவார்கள். இதை நாம் ஆஸ்பத்திரி செலவிற்கான பாலிசி தொகை என்று எடுத்து கொள்ளக்கூடாது. வருத்தமான விஷயம் என்னவென்றால் விளம்பரங்களில், சில நேரம் நேரில், அதை போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவது உண்மை தான். இது நிழல்.
காம்போவாக பல கவரேஜ்கள் இருக்கின்றன என்று கூறினேன் இல்லையா, ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட பாலிசி தொகை உண்டு. இதை எல்லாம் கூட்டி ஒரு தொகையாக கூறுவது தான் இந்த ஐந்து லட்சம். இது நிஜம்.
இதில், மிகப் பெரிய பகுதியான ஆஸ்பத்திரி செலவு பாலிசிக்கு வருவோம். உள்நாட்டு ஆஸ்பத்திரி செலவு பாலிசியின் கீழ், இந்தியாவில் எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்ந்து சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சை அவசர ரீதியாகவும் இருக்கலாம். ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் அல்லது விபத்து போல அல்லது மருத்துவர் தேவை என்று கூறும் சிகிச்சையை நமக்கு ஏற்ற காலகட்டத்தில் பெற்று கொள்ளலாம்.
ஆனால், வெளிநாட்டு மருத்துவ செலவு பாலிசி கவரேஜில், முன்னமே இருக்கக்கூடிய ஒரு நோய்க்கு, நமக்கு விருப்பமான காலகட்டத்தில் தேர்ந்தெடுத்து சிகிச்சை பெற்று கொள்ளும் வசதி கிடையாது. இந்த விஷயத்தில் எது நிழல், எது நிஜம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்!
உங்கள் தகவலுக்காக இந்த பாலிசி பற்றி ஒரு சில வார்த்தைகள்:
பலதரப்பட்ட கவரேஜ் தொகைகளை இதில் நீங்கள் பெற்று கொள்ளலாம். ஒரு லட்சம் டாலரில் இருந்து 10 லட்சம் டாலர் வரை, இன்னும் அதிகமாக கூட, சில கம்பெனிகள் கொடுக்கின்றன.
இந்தியாவில் இருந்து கிளம்பும் நாள் முதல், இந்தியாவிற்கு மறுபடியும் திரும்பி வரும் நாள் வரை கவரேஜ் நீடிக்கும். இதற்கு உங்களுடைய பாஸ்போர்ட், விசா இரண்டு வழி டிக்கெட் அனைத்தையும் கேட்பார்கள்.
பாலிசி வாங்கும்போது, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல இருந்தால் அதை தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அங்கு மருத்துவ செலவுகள் அதிகம்.
சரி, பயண காப்பீடு நல்லதா? கெட்டதா? என்றால் நல்ல பாலிசிதான். ஆனால், என்ன கவரேஜ் இருக்கிறது, என்ன இல்லை என்று நீங்கள் தெரிந்து கொண்டால் எதுவுமே நல்ல பாலிசி தான்.

