sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ எல்லைகளை விரிவுபடுத்தும் 'அல்ட்ராடெக்'

 எல்லைகளை விரிவுபடுத்தும் 'அல்ட்ராடெக்'

 எல்லைகளை விரிவுபடுத்தும் 'அல்ட்ராடெக்'


ADDED : ஏப் 12, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 01:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதித்யா பிர்லா குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனம் 'அல்ட்ராடெக் சிமென்ட்'. ஆண்டுக்கு 19.68 கோடி டன் சிமென்டை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உற்பத்தி திறனை பொறுத்தவரை, இந்திய அளவில் முதலாவது இடத்திலும், சர்வதேச அளவில் (சீனாவை தவிர்த்து) இரண்டாவது இடத்திலும் உள்ளது.

விற்பனை அளவிலும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக திகழ்கிறது. மொத்தம் 34 ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளும், 34 அரவை நிலையங்களும் உள்ளன. இவை தவிர 425 'ரெடி-மிக்ஸ் காங்கிரீட்' ஆலைகளையும் செயல்படுத்தி வருகிறது.

'பிர்லா ஒயிட்' போன்ற சிமென்ட் வகைகள் மட்டுமின்றி, 'அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்' என்ற சில்லரை விற்பனை கடைகள் மூலம் கட்டுமான பொருட்களையும் வழங்கி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பிற நிறுவனங்களை கையகப்படுத்துவதன் மூலம் தனது வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

உதாரணமாக, டிசம்பர் 2024ம் ஆண்டில், 'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தின் சுமார் 81.50 சதவீத பங்குகளை அல்ட்ராடெக் கைப்பற்றியது. மேலும், ஏப்ரல் 2024ம் ஆண்டு முதல் 'கேசோரம் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் சிமென்ட் பிரிவு இதனுடன் இணைக்கப்பட்டது. இத்தகைய ஒப்பந்தங்கள் மற்றும் புதிய திட்டங்கள் வாயிலாக, அல்ட்ராடெக் தனது இந்திய அளவிலான சந்தையை விரிவுபடுத்தியுள்ளது.

முதலீட்டுக்கு சாதகமானவை அல்ட்ராடெக் வளர்ச்சி, இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நில விற்பனை துறையின் வளர்ச்சியை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் கட்டுமான பணிகளில் அதிக முதலீடு செய்கின்றன. குறிப்பாக, 2026ம் நிதியாண்டில், அரசின் மூலதன செலவு 9 முதல் 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், சிமென்டுக்கான தேவை சீராக இருந்து வருகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் சிமென்ட் சந்தை வலுவான வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உள்கட்டமைப்பு பணிகளால் 2027ம் நிதியாண்டில் 6 முதல் 7 சதவீதம் தேவை அதிகரிக்கும் என 'ஐ.சி.ஆர்.ஏ.,' கூறுகிறது.

இந்தியாவின் 80 சதவீத சந்தையை எட்டும் வகையில், 1.45 லட்சம் விநியோகஸ்தர்களை கொண்டுள்ள அல்ட்ராடெக், தனது வலுவான பிராண்டு மூலம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது.

மேலும், ஆண்டுதோறும் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது. 2028ம் நிதியாண்டிற்குள் கூடுதலாக 2.30 கோடி டன் உற்பத்தி திறனை சேர்க்க, 10,255 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. இதனால் மொத்த உற்பத்தி திறன் 24 கோடி டன்னாக உயரும்.

நிறுவனம் செலவுகளைக் குறைத்து, கொள்முதல் வலிமையை அதிகரித்துள்ளது. 2026ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் தேவையில் 42 சதவீதத்தைப் பூர்த்தி செய்து, எரிபொருள் செலவைச் சிக்கனப்படுத்தியுள்ளது. மேலும், போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, லாப வரம்பைத் தக்கவைக்க முயல்கிறது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் தனது வணிகத்தை பன்முகப்படுத்தி வருகிறது. 2025ம் ஆண்டின் பிற்பகுதியில், சுமார் 1,800 கோடி ரூபாய் முதலீட்டில், மின்சார கம்பிகள் மற்றும் ஒயர்கள் தயாரிக்கும் துறையில் இறங்குவதாக அறிவித்தது. இது 2027ம் நிதியாண்டில் அறிமுகமாக உள்ளது.

விரிவாக்கம், நிதி நிலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், வலுவான நிதிநிலை அறிக்கையையும் கொண்டிருக்கிறது. 2026ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் 2,357 கோடி ரூபாய் மூலதன செலவு செய்துள்ள போதிலும், அதன் கடன் மற்றும் லாப விகிதம் மிகவும் கட்டுப்படியாகக் கூடிய அளவிலேயே உள்ளது.

பணப்புழக்கம் ஒரு பெரிய பங்கு லாபத் தொகையை வழங்கும் அளவிற்கு வலுவாக உள்ளது. 2025ம் நிதியாண்டிற்காக 775 சதவீதம் (பங்கிற்கு ரூ.77.50) பங்கு லாபம் வழங்க வாரியம் பரிந்துரைத்துள்ளது.

தொழிற்துறை சூழல் 2025ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் சுமார் 690 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. நாட்டின் மொத்த விற்பனையில் 28 சதவீத பங்கை கொண்டு, அல்ட்ராடெக் முதலிடத்தில் உள்ளது.

நிலக்கரி விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் உற்பத்தி செலவு அதிகரிப்பது லாப வரம்பை குறைக்க வாய்ப்புள்ளது. மேலும், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் உற்பத்தி திறனை தீவிரமாக அதிகரித்து வருவதால், சந்தையில் கடும் போட்டி ஏற்படக்கூடும்.

தேவையை விட விநியோகம் அதிகமாகும் போது, விலையின் மீது அழுத்தம் உண்டாகி, லாபம் குறைய வாய்ப்புள்ளது. செலவின அதிகரிப்பு மற்றொரு கவலையளிக்கும் விஷயமாகும். 'பெட்கோக் மற்றும் நிலக்கரி' விலையேற்றம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவை லாபத்தை பாதிக்கக்கூடும்.

அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் விதிகள், சுரங்க சட்டங்கள் மற்றும் வரி விதிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை பாதிக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய சவால்கள் இருப்பதால், நிறுவனத்தின் வளர்ச்சி எப்போதும் சீராக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கண்மூடித்தனமாக நம்பாமல், சந்தை மாற்றங்களைக் கவனித்து செயல்படுவது அவசியமாகும். ஒரு சிறிய பின்னடைவுகூட பங்கு விலையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

பங்கின் மதிப்பீடு அல்ட்ராடெக் பங்கின் தற்போதைய விலை அதன் உள்ளார்ந்த மதிப்பை விட உயர்ந்து காணப்படுகிறது. 2026ன் தொடக்கத்தில் இதன் பி.இ விகிதம் 42-43 ஆகவும், 'இ.வி.,/எபிட்டா' விகிதம் 22 ஆகவும் உள்ளது. இது வரலாற்று சராசரியை விட அதிகம்.

அல்ட்ராடெக் பங்கின் விலை உயர்வாக இருப்பதற்கு அதன் வலுவான நிதி நிலையும் சந்தை ஆதிக்கமுமே முக்கிய காரணங்களாகும். நிறுவனத்தின் 'ஆர்.ஓ.சி.இ., (முதலீட்டு மீதான வருவாய்)' 11.40 சதவீதம் மற்றும் 'ஆர்.ஓ.இ.,' (பங்கு மூலதன மீதான வருவாய்) 10.20 சதவீதமாக இருக்கிறது.

சந்தை சாதகமாக இருக்கும்போது பங்கு விலை உயர்ந்தாலும், அதற்கேற்ப முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். தற்போதைய அதிக விலைக்கு ஏற்ப நிறுவனம் தொடர்ந்து லாபத்தை ஈட்டுமா என்பது கவனிக்கத்தக்கது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் உள்கட்டமைப்பு நிதி மற்றும் நிலக்கரி போன்ற மூலப்பொருட்களின் விலை போன்ற வெளிப்புற காரணிகளே நிறுவனத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் இத்தகைய அம்சங்களை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டுப் பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டும் இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டும் இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us