
அர்பன் கம்பெனி
பு திய பங்கு வெளியீட்டுக்கு வந்த முதல் நாளான நேற்று, அர்பன் கம்பெனியின் பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. நிறுவன முதலீட்டாளர்கள் 0.20 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 1.30 மடங்குக்கு அதிகமாகவும் விண்ணப்பித்து இருந்தனர்.
அதிகபட்சமாக சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 3 மடங்கும், பணியாளர் ஒதுக்கீடு பிரிவில் 2.91 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அர்பன் கம்பெனி தெரிவித்துள்ளது. நாளையுடன் பங்குகள் கேட்டு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைகிறது.
ஹவுஸ் ஆப் மங்கள்சூத்ரா
மு ம்பையைச் சேர்ந்த நகைகள் தயாரிப்பாளரான ஸ்ரீநகர் ஹவுஸ் ஆப் மங்கள்சூத்ரா நேற்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. முதல்நாளான நேற்று, 1.62 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களிடம் இருந்து 2.07 மடங்கு விண்ணப்பங்களும், தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 1 சதவீதம் விண்ணப்பங்களும் வந்துள்ளன. சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 2.34 மடங்கும், அதிகபட்சமாக பணியாளர் ஒதுக்கீடு பிரிவில் 7.39 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க அவகாசம், நாளை கடைசி நாளாகும்.
தேவ் ஆக்சிலரேட்டர்
பி ரீமியம் அலுவலக பகிர்வு சேவைகளை அளித்து வரும் தேவ் ஆக்சிலரேட்டர் நேற்று புதிய பங்கு வெளியீடுக்கு வந்தது.
முதல் நாளான நேற்று, அதிகபட்சமாக சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில், பங்குகள் கேட்டு 14 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இப்பிரிவில் வெறும் 23 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில், நேற்று மட்டும் 3.18 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.