வருமான வரி தாக்கலுக்கு இன்று கடைசி நாள் தவற விட்டால் செய்ய வேண்டியது என்ன?
வருமான வரி தாக்கலுக்கு இன்று கடைசி நாள் தவற விட்டால் செய்ய வேண்டியது என்ன?
ADDED : செப் 15, 2025 01:26 AM

சென்னை:கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கு, வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள். ஒருவேளை இன்றைய தேதிக்குள் தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு, அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதில் சந்தேகங்கள் எழும்.
இனிமேல் வாய்ப்பே இல்லையா என்ற சந்தேகம்கூட வரக்கூடும். மத்திய வருமான வரித்துறை, தாமதமாக ஐ.டி.ஆர்., தாக்கல் செய்வதற்கும் வாய்ப்பு அளித்துள்ளது.
ஆனால், அதில் ஒருசில அபராதங்களும் வட்டியையும் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒருவரது ஆண்டு மொத்த வருவாய் 5 லட்சம் ரூபாய் இருந்து, அவர் தாமதமாக வரித் தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அதுவே அவரது ஆண்டு மொத்த வருவாய் 5 லட்சம் ரூபாயைத் தாண்டியிருந்தால், அவர் 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
வருமான வரி விலக்கு வரம்புக்குள் மட்டுமே ஒருவரது ஆண்டு வருவாய் இருந்து, அவர் தாமதமாக வரித் தாக்கல் செலுத்தினால், எந்த அபராதமும் செலுத்த வேண்டியிராது.
அதாவது, புதிய வரித் திட்டத்தின்படி, ஆண், பெண் இருபாலருக்கும் அடிப்படை வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய்.
பழைய வரித் திட்டத்தின்படி, 60 வயதுக்குள் உள்ளவர்களுக்கு வரி விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாய், 60 முதல் 79 வயது வரையுள்ள மூத்த குடிமக்களுக்கு 3 லட்சமும், 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் வரி விலக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் மட்டுமல்லாது, ஒருவர் செலுத்த வேண்டியிருக்கும் மிச்சமுள்ள வரித் தொகை மீது வட்டியும் கட்ட வேண்டும்.
அதாவது, வருமான வரித் தாக்கல் செய்யவேண்டிய செப்டம்பர் 15க்கு அடுத்த நாளில் இருந்து வட்டி போடப்படும். ஒரு மாதத்துக்கு 1 சதவீதம் என்ற வீதத்தில், வட்டி விதிக்கப்படும்.
தாமதமாக ஐ.டி.ஆர்., தாக்கல் செய்வதன் வாயிலாக, ஒருசில இழப்புகளும் ஏற்படலாம். உதாரணமாக, மூலதன ஆதாயம் அல்லது வணிக இழப்புகளை, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல இயலாது.
ஆனால், வீட்டை விற்றதன் வாயிலாக ஏற்பட்ட இழப்பை மட்டும் அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
மேலும், ரீபண்டு ஏதேனும் வரவேண்டியிருந்தால், அதுவும் தாமதமான வருமான வரித் தாக்கலினால் இன்னும் தாமதமாகும்.
தாமத ஐ.டி.ஆர்., தாக்கல் செய்வதற்கும் இறுதி நாள் உண்டு. அது, வரும் டிசம்பர் 15ம் தேதி.