தடுமாற வைக்கும் தாமிரம் விலை முதலீட்டாளர்கள் என்ன முடிவெடுப்பது?
தடுமாற வைக்கும் தாமிரம் விலை முதலீட்டாளர்கள் என்ன முடிவெடுப்பது?
UPDATED : நவ 11, 2026 01:26 AM
ADDED : நவ 10, 2026 10:06 PM

சமீபத்தில் சர்வதேச ஏ.ஐ., துறை பங்குகளில் ஏற்பட்ட சரிவால், தாமிரத்தின் விலையும் இறங்கியது. இந்நிலையில், நேற்று தாமிர விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தாமிரம் விலை தொடர்ந்து உயருமா என்பது பற்றி கமாடிட்டி சந்தை நிபுணர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்ததாவது:
உலகின் 60 சதவீத தாமிரம் தற்போது அமெரிக்காவின் 'காமெக்ஸ்' சந்தையிலேயே குவிந்துள்ளது. தாமிரம் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்நாட்டில் இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியான பின், கூடுதல் வரி விதிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தரவு மையங்கள்
ஏ.ஐ., தரவு மையங்களுக்கு ஏற்கனவே டொனால்டு டிரம்ப் அரசு வழங்கிய ஒப்புதல்களில் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை. புதிதாக ஒப்புதல்கள் வழங்கப்படும்போது, சில சவால்கள் எழலாம். எனினும், கொள்கை ரீதியாக அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும் தரவு மையங்களை எதிர்க்கவில்லை. மாறாக, ஒப்புதல்கள் வழங்குவதற்கு சில வழிமுறைகள் கொண்டுவரப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை தொடரும்
தற்போது சர்வதேச அளவில் தாமிரத்துக்கான தேவை ஆண்டுக்கு 2.80 கோடி டன்னாக உள்ளது. நடப்பு 2026ம் ஆண்டிலோ 2.70 கோடி டன் மட்டுமே 'சப்ளை' உள்ளது. இந்த பற்றாக்குறை அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான புதிய உற்பத்தி வாய்ப்புகளும் உருவாகவில்லை. ஏற்கனவே உள்ள சுரங்கங்களும் முதிர்ச்சி அடைந்துவிட்டதால், உலோகத்தின் தரம் குறைந்துள்ளது. ஆகவே, தாமிரத்துக்கான பற்றக்குறை தொடர்ந்து நீடிக்கும். விலை உயருவதற்கு அடிப்படைகள் ஆதரவாகவே உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

