ஐ.பி.ஓ., நிதி எங்கே செல்கிறது? கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி
ஐ.பி.ஓ., நிதி எங்கே செல்கிறது? கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி
ADDED : ஜன 22, 2026 01:30 AM

பங்குச் சந்தையில், ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் பணம், சரியான காரணத்துக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் நடைமுறை, கடுமையாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
தற்போதுள்ள விதிகளின்படி, நிறுவனங்கள், ஐ.பி.ஓ.,வில் திரட்டும் நிதியின் பயன்பாட்டை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, 'கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி'யை நியமிக்க வேண்டும்; அவை, ஐ.பி.ஓ.,வில் திரட்டப்படும் நிதி, அந்நிறுவனத்தால் முழுமையாக பயன்படுத்தப்படும் வரை கண்காணித்து, ஒவ்வொரு காலாண்டிலும் தணிக்கை குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இது, 'ஆபர் பார் சேல்' முறையில் திரட்டப்படும் நிதிக்கு பொருந்தாது.
இந்நிலையில், கடந்த காலங்களில் பங்குச் சந்தைகள் உச்சத்தில் இருந்தபோது, நிறுவனங்கள் ஒரு காரணத்துக்காக பணம் திரட்டிவிட்டு, அதை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்டிய பணத்தை எதற்கு பயன்படுத்துகின்றன என்ற அறிக்கையை, ரேட்டிங் ஏஜன்சிகள் நேரடியாக பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்க, செபி அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
இதன்வாயிலாக, ஐ.பி.ஓ.,வில் திரட்டப்படும் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும்; முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான தகவல்கள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
