sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 எஸ்.ஐ.பி.,க்கு ஏன் இவ்வளவு மவுசு?

/

 எஸ்.ஐ.பி.,க்கு ஏன் இவ்வளவு மவுசு?

 எஸ்.ஐ.பி.,க்கு ஏன் இவ்வளவு மவுசு?

 எஸ்.ஐ.பி.,க்கு ஏன் இவ்வளவு மவுசு?


UPDATED : டிச 22, 2025 01:30 AM

ADDED : டிச 22, 2025 01:19 AM

Google News

UPDATED : டிச 22, 2025 01:30 AM ADDED : டிச 22, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மியூச்சுவல் பண்டு திட்டங்கள் என்பவை இந்திய மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் புது மோகமாக உருவெடுத்து வருகிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 22.08 கோடியாக இருந்த மியூச்சுவல் பண்டு போலியோக்கள், இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 25.86 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 17.12 சதவீதம் வளர்ச்சி. அதிலும் அதிகமானோர், எஸ்.ஐ.பி., எனப்படும் 'முறையான சேமிப்பு திட்டத்தில்' தான் சேருகின்றனர். என்ன காரணம்?

Image 1511168

மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. கையில் இருக்கும் பணத்தை ஏதேனும் ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்வது ஒரு வழிமுறை. இதற்கு, 'லம்ப் - சம்' முதலீடு என்று பெயர். பலருக்கும் இது சாத்தியமில்லை.

ஒரு சிலர் மாதாந்திர தவணை செலுத்துவது போல் எஸ்.ஐ.பி., போடுவர். வேறு சிலரோ, காலாண்டு, அரையாண்டு, ஓராண்டுக்கு ஒருமுறை என்று கூட பணம் சேர்த்து, முதலீடு செய்வர்.

முறையாக முதலீடு செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அதேசமயம், அதீத எதிர்பார்ப்பும் இருக்கிறது; நாளைக்கே கோடீஸ்வரனாகி விடுவோம் என்ற ஒரு மயக்கம் இருக்கிறது.

கோடீஸ்வரனாவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், பணப்பயிரை ஒரே நாளில் அறுவடை செய்துவிட முடியாது. நெற்பயிர் வைத்தாலே அறுவடை செய்ய 90 - 120 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் போது, அதை விட அதிக காலத்தை பணப்பயிர் எடுத்துக்கொள்ளுமே?

மியூச்சுவல் பண்டு எனும் பணப்பயிர் வளர்வதிலும் ஒருசில கட்டங்கள் இருக்கின்றன.

முதலில் சிறிய அளவில் ஒரு தொகையை மாதா மாதம் ஏதேனும் நல்ல மியூச்சுவல் பண்டு திட்டத்தில், தொலைநோக்கோடு முதலீடு செய்து வர வேண்டும். அதாவது, 10 - 15 ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஏதேனும் ஓர் இலக்கை மனத்தில் வைத்து, இந்த முதலீட்டை துவங்க வேண்டும்.

ஆரம்ப ஆண்டுகளில் பண்டு திட்டம் பெரிய வருவாயை ஈட்டாது. அது வளருவேனா என்று கைக்குழந்தை போல அடம் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் மொபை லில் போர்ட்போலியோவை திறந்து பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது. முதலீடு வளர்வதற்கு பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம். கால அவகாசம் வேண்டு மல்லவா?

இன்னொரு பிரச்னையும் வரும். பங்கு சந்தை திடீரென்று சரியும். அதை சார்ந்திருக்கும் பண்டு திட்டங்களுடைய என்.ஏ.வி.,யும் குறைந்து போய்விடும். உடனே பயந்து போய், போட்ட பணத்தை எடுத்து விடவும் கூடாது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தச் சரிவு சமயத்தில் தான், கூடுதலாக மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை வாங்கி போட வேண்டும்.

உங்கள் வாழ்க்கையிலும் சிக்கல்கள் தோன்றும்; வேலை பறிபோகலாம்; வேறு செலவுகள் கழுத்தை நெரிக்கலாம். எஸ்.ஐ.பி., தொகையை வேறு எங்கேனும் செலவு செய்யலாமே என்று மனசு அல்லாடும்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் திடீர் திடீரென்று புத்திசாலித்தனமாக பேசுவர். அவர் செய்த ஏதோ ஒரு முதலீடு, பயங்கரமாக வருவாய் ஈட்டித் தந்திருக்கும். 'நாம் தப்பு செய்து விட்டோமோ, எஸ்.ஐ.பி., போட்டு என்ன பலனை கண்டோம்; கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்கிறதே... அவரது வழியை பின்பற்றி இருக்கலாமோ' என்று எண்ணத் தோன்றும்.

ஆனால், இந்த குறுகிய கால பதற்றங்களை ஒதுக்கி வைத்து, பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்வது போல், 'ஸ்திதப் பிரக்ஞன்' போல் இருந்து எஸ்.ஐ.பி.,யை தொடர வேண்டும்.

திடீரென்று ஒரு நாள் விடிவு பிறக்கும். கண்ணெதிரே சோம்பலாக துாங்கிக் கொண்டிருந்த போர்ட்போலியோ, பச்சை வண்ணத்தில் ஜிகு ஜிகுவென ஒளிரும். அது தான் பல்கி பெருகுதல் எனும் மாயம் செய்திருக்கும் மாற்றம். பல்கி பெருகுதல் என்ற மாயம், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் கண்ணுக்கே தெரிய வரும். பத்து ஆண்டுகளில் அது 'பளிச்'சென்று துலக்கமாகத் தெரியும்.

கொஞ்சம் இப்படி யோசித்து பாருங்கள். மாதம் 10,000 ரூபாய் முதலீட்டை, 25 ஆண்டுகள் தொடர்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். நீங்கள் செய்திருக்கும் முதலீடு வெறும் 30 லட்சம் தான். ஆனால், 13 சதவீத ஆண்டு வருவாயில், 25 ஆண்டுகளின் இறுதியில் அது எட்டியிருக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 1.65 கோடி ரூபாய்.

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால், அது தான் எஸ்.ஐ.பி.,யின் வலிமை; காலத்தின் லீலை.

இதில் இருக்கும் மிகப் பெரிய சவால், தொடர்ந்து முதலீடு செய்வது தான்.

எஸ்.ஐ.பி.,க்கு ஒரு பயன் இருக்க வேண்டும் அல்லவா? குழந்தைகளின் கல்வி, மேற்படிப்பு, திருமணம், ஓய்வு காலத்துக்கு தேவைப்படும் நிதித் தொகுப்பு என, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தோடும் எஸ்.ஐ.பி.,யை பொருத்திக் கொள்ளுங்கள்; அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள்.

எஸ்.ஐ.பி., என்பது ஆரம்பத்தில் சரக்கு ரயில் மாதிரி இருக்கும். ரொம்ப மெதுவாக தடக் தடக்கென்று ஓடும்; 10 ஆண்டுகள் கழித்து அதுவே பயணியர் ரயில் மாதிரி ஆகிவிடும். சீரான ஓட்டத்தில், வேகத்தில் குறிப்பிட்ட இலக்குகள் என சொல்லப்படும் ரயில் நிலையங்களை அடைந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவது கட்டம் என்பதோ, புல்லட் ரயில் மாதிரியானது. முதலீடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாகிக் கொண்டே போகும்.

இந்தக் கட்டத்தில் நீங்கள் நினைத்ததையெல்லாம் உடனே வாங்க முடியும். வாழ்க்கையில் சுபிட்சம், உங்கள் வீட்டை விட்டு நகரவே மாட்டேன் என்று கூடாரம் போட்டு அமர்ந்து கொள்ளும்.

இவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடைபெற வேண்டும் என்றால், முதலில் தேவை பொறுமை; பின்னர் திட்டமிடல். அது இட்டுச்செல்லும் உயரமோ மிக மிக அதிகம்.






      Dinamalar
      Follow us