ADDED : ஜன 18, 2026 03:29 AM

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, உறுப்பினர்களுக்கு வசதியாகவும், வேகமாகவும் சேவைகளை வழங்க, பல டிஜிட்டல் சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது.
அதன் முக்கிய அம்சமாக, வரும் ஏப்ரல் முதல் பி.எப்., கணக்கில் உள்ள பணத்தை யு.பி.ஐ., வாயிலாக ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குக்கு நேரடியாக மாற்றிக் கொள்ள முடியும். அதன் பின்னர், அந்த பணத்தை ஏ.டி.எம்., வழியாக எடுத்து பயன்படுத்தலாம்.
இதுவரை, பி.எப்., பணம் பெற கிளெய்ம் விண்ணப்பம் அவசியமாக இருந்தது.
இது நேரம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையாக இருந்தது. இந்நிலையில், தற்போது, 'ஆட்டோ-செட்டில்மென்ட்' முறையில், 5 லட்சம் ரூபாய் வரை உள்ள கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் தானாகவே பணம் செட்டில் செய்யப்படும். முன்பு இந்த உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது.
மேலும், முக அங்கீகார தொழில்நுட்பம் வாயிலாக உறுப்பினர்களே தங்களுக்கான யு.ஏ.என்., எனப்படும் யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை உடனடியாக உருவாக்கி செயல்படுத்தும் வசதியை இ.பி.எப்.ஓ., 2025 ஏப்ரல் 8ம் தேதி அறிமுகம் செய்தது.
இதனால், தாமதமும் தவறுகளும் குறைந்துள்ளன; 2025ம் ஆண்டு இறுதிக்குள் 50 லட்சம் புதிய யு.ஏ.என்.,களும், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட புரொபைல் திருத்தங்களும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

