ADDED : ஜன 26, 2026 01:52 AM
ஓய்வு கால சேமிப்பின் முக்கியமான அம்சம், இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி. இப்போது இந்தத் திட்டம் தான் 'ஹாட்' டாப்பிக். பி.எப்., பணத்தை எடுப்பதற்கு சுலபமான வழிமுறைகள் அறிமுகம் ஆகப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு பணியாளர்கள் மத்தியில் இருக்கிறது. இவ்வளவு எடுக்கலாம், அவ்வளவு எடுக்கலாம் என்ற வரையறைகள் எல்லாம் வேறு வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஏன் இந்தத் திட்டத்தின் மீது இவ்வளவு மவுசு? வீட்டில் திருமணம், மேற்படிப்பு, மருத்துவச் செலவு, புது வீடு கட்டுவது என்று எந்த ஒரு ஆத்திர அவசரத்துக்கும் கைகொடுப்பது பி.எப்., பணம் தான்.
இது மத்திய அரசின் திட்டம். மாதச் சம்பளம் வாங்குவோருக்கான ரிஸ்க் இல்லாத முதலீடு. கண் மறைவாக இந்த தொகை வளர்ந்துகொண்டே இருக்கும். இதில் இருக்கும் பல்வேறு சாதகமான அம்சங்கள்தான், இந்த ஓய்வுக்கால சேமிப்பை கவர்ச்சிகரமாக ஆக்குகின்றன.
இதில், பணியாளர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளம் பிளஸ் அகவிலைப்படியில் 12 சதவீதம் பங்களிப்பு செய்ய, அதே அளவுக்கு நிறுவனமும் பங்களிப்பு செய்யும்.
இந்த சேமிப்புக்கு தற்போது 8.25 சதவீதம் வட்டி கிடைக்கிறது. வேறு எந்த அரசு துறை சேமிப்புகளுக்கும் இவ்வளவு வட்டி கிடைப்பதில்லை என்பது ஞாபகமிருக்கட்டும். அதேபோல், பழைய வரித் திட்டத்தின் படி, பணியாளரது பங்களிப்புக்கு பிரிவு 80 சி.யின் படி, 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு பெறலாம். எடுக்கும் பணத்துக்கும் சரி, வட்டிக்கும் சரி, வரி கிடையாது.
அதாவது, ஒவ்வொரு பணியாளரும், எப்படியேனும் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் இது.
ஒரு தோராயமான கணக்கு போடுவோம். ஒருவருக்கு ஆண்டு சம்பளம் 8 லட்சம் ரூபாய் என்று கருதுவோம். அவருடைய 12 சதவீத பி.எப்., பங்களிப்பு தொகை 96 ஆயிரம் ரூபாய். அவர் வேலை செய்யும் நிறுவனமும் அதே தொகை போட, போய்ச் சேரும் மொத்த பணம் 1,92,000.
அதே சம்பளத்தில் அவர் பல ஆண்டுகள் தொடர்வதாக கருதினாலும், சேமிப்பு எவ்வளவு துாரம் வளர்கிறது என்று பார்ப்போமா?
ஐந்து ஆண்டுகளின் முடிவில், மொத்த பங்களிப்பு 9.60 லட்சம், வட்டி 2.26 லட்சம், மொத்த தொகை 11.86 லட்சமாக இருக்கும். 10 ஆண்டுகளில் மொத்த சேமிப்பு 19.20 லட்சமாக இருக்க, வட்டியோ 11.57 லட்சமாகவும் மொத்த தொகை 30.77 லட்சமாக இருக்கும். ஒருவர் 25 வயதில் வேலைக்கு வந்து 60 வயதில் ஓய்வு பெறுகிறார் என்றால், அவரது சேமிப்பு தொகை 67.20 லட்சமாகவும், வட்டி மட்டும் 5.29 கோடியாகவும் இருக்க, மொத்த சேமிப்பு 5.96 கோடி ரூபாயாக இருக்கும்.
வாழ்க்கையில் மீதமிருக்கும் ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிக்க, இந்தத் தொகை நிச்சயம் கைகொடுக்கும்.
பயன்கள் இந்த பி.எப்., திட்டத்தின் முக்கியமான அம்சமே, மூலதனத்துக்கான பாதுகாப்பு தான். பி.எப். சேமிப்புத் தொகையை நிர்வகிப்பது மத்திய அரசு என்பதால், அதைவிட வேறு எவராலும் பெரிய பாதுகாப்பை வழங்கிவிட முடியாது. ஒவ்வொரு ஆண்டும், பி.எப்., நிலுவைத் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்பதை அரசு தெளிவாக அறிவித்துவிடுவதால், என்ன வருவாய் வரப் போகிறது என்பதைக் கணக்கிட்டு பார்த்துக்கொள்ளலாம்.
இப்போது பி.எப்., பில் இருந்து பணம் எடுப்பதற்கான வழிமுறைகளில் பல புதுமைகள் அறிமுகம் ஆகியுள்ளன. 58 வயதில் ஒருவர் ஓய்வுபெறும் போது, மொத்த பணத்தையும் எடுக்கலாம். அல்லது வேலையில்லாமல் இரண்டு மாதங்கள் இருந்தாலே முழுப்பணத்தையும் எடுக்கலாம். அல்லது நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டாலும் முழுமையாக எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையை வைத்துவிட்டு, 75 சதவீதம் பணம் எடுப்பதற்கு அனுமதி உண்டு. இதை எடுப்பதற்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணியில் இருந்தால் போதும் என்றும் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
யு.பி.ஐ., வாயிலாக, பணத்தை எடுப்பதற்கு விரைவில் வசதி வரப் போகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சேமிப்பு அரசு சார்ந்த கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இனங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது. மேலும், பணி ஓய்வின் போது, ஒழுங்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்துகொண்டால் போதும். மீதமிருக்கும் வாழ்க்கை முழுவதும் பணம் வந்துகொண்டே இருக்கும்.
குறைகள் 8.25 சதவீத வட்டி என்பது மற்ற வட்டிவிகிதங்களோடு ஒப்பிடும்போது அதிக வட்டிதான். ஆனால், பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டால், இது பெரிய வருவாய் ஈட்டித் தரவில்லை. உதாரணமாக பணவீக்கம் 5 முதல் 6 சதவீதம் என்று கணக்கிட்டால், உண்மையான வருவாய் 2.25 சதவீதம் தான்.
ஒருவேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது, பி.எப்., தொகையை மாற்றிக்கொள்வதும், மீண்டும் தொடர்வதும் கொஞ்சம் இம்சை பிடித்த வேலை.
இன்னொரு விஷயம், இந்தச் சேமிப்புத் தொகையை, நாமே நம்முடைய இஷ்டத்துக்கு எங்கே முதலீடு செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது. அரசு தரும் வட்டி விகிதத்தைத்தான் நம்பியிருக்க வேண்டும்.
பலரும், இடையிலேயே அவ்வப்போது, தத்தமது தேவைக்கேற்ப பணத்தை எடுத்துவிடுவதால், ஓய்வுபெறும் போது, சேமிப்பில் பெரிய தொகை இராது. அதனால், அப்போது பி.எப்., பணம் என்பது அதீத கவர்ச்சிகரமாக இல்லாமல் போய்விடும். அந்தப் பணத்தைத் தொடாமல், கிணற்றை பூதம் காத்திருப்பது போல் காத்திருந்தால், பெரிய லாபம் நிச்சயம் வரும்.
இதுவே போதுமா? சேமிப்புப் பணத்தைத் தொடவில்லை என்றால் அது பல்கிப் பெருகியிருக்கும். ஆனால், ஒரு விஷயம் உண்மை. இந்த ஓய்வூதியத்துக்கான சேமிப்பு, குடும்பத்துக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
எதிர்காலத்துக்குத் தேவை, இப்போது அதைத் தொடக்கூடாது என்று வைராக்கியத்தோடு இருப்பவர்களுக்கு பி.எப். பென்ஷன் திட்டம் நிச்சயம் கைகொடுக்கும்.

