ஜீரோ பேலன்ஸ்: எஸ்.ஐ.பி.,கள் ஏன் வெற்றி பெறுகின்றன?
ஜீரோ பேலன்ஸ்: எஸ்.ஐ.பி.,கள் ஏன் வெற்றி பெறுகின்றன?
UPDATED : ஜன 12, 2026 02:44 AM
ADDED : ஜன 12, 2026 02:43 AM

'எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள், அதனால் நீங்கள் பெறக்கூடிய லாபமும் சுபிட்சமும் அதிகம்' என்று சொல்வதற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. உண்மையில் இவைதான் வளர்ச்சிக்கான சூட்சுமங்கள்.
ரூபாய் மதிப்பு சராசரி எனப்படும், 'ருபி காஸ்ட் ஆவரேஜிங்க்' இதில் பிரதானமானது. அதாவது, ஒவ்வொரு முறையும் ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தில் 'இத்தனை யூனிட்டுகளை வாங்குகிறேன்' என்பதை விட, 'இத்தனை ரூபாய்க்கு இத்தனை யூனிட்டுகள் வாங்குகிறேன்' என முடிவு செய்வது சரியான அணுகுமுறை.
இப்படிச் செய்யும்போது, சந்தைச் சரிவின் போது, கூடுதல் யூனிட்டுகள் கிடைக்கும். காளை ஓட்டத்தின் போதோ, குறைவான யூனிட்டுகள் கிடைக்கும்.
ரூபாய் மதிப்பு சராசரி என்ற அணுகுமுறை, எத்தகைய பலனைத் தருகிறது என்பதைப் புரிந்துகொள்ள, ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட பண்டுத் திட்டத்தில், 2024 ஜூலை, முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் எஸ்.ஐ.பி., போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இந்த ஆறு மாதங்களில், ஒருமுறை பங்குச் சந்தை சரிந்து மீண்டது என்பது வரலாறு. அதாவது, ஜூலை மாதம், ஒரு குறிப்பிட்ட பண்டு யூனிட்டின் விலை 50 ரூபாயாக இருந்தது. ஆகஸ்டில், அது 48, செப்டம்பரில் 46, அக்டோபரில் 45, நவம்பரில் 48, டிசம்பரில் 52 ஆக இருந்தது.
மாதந்தோறும் 10,000 ரூபாய் போட்டிருந்தால், ஆறு மாதங்களில், முதலீட்டாளருக்கு 1,248.58 யூனிட்டுகள் கிடைத்திருக்கும். அதன் மதிப்பு 60,432 ரூபாயாக இருக்கும். அதா வது, 6 சதவீத வருவாய்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? இந்த நபர், ஒரு யூனிட்டை சராசரியாக 47.95 ரூபாய்க்கு வாங்கிஇருக்கிறார்.
இதே 60,000 ரூபாயை, ஜூலை மாதம் 'லம்ப்-சம்' முதலீடாக இதே மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இதே நபர் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 1,200 யூனிட்டுகளும், ஆறு மாதங்களின் இறுதியில் அதன் மதிப்பு 60,400 ரூபாயாக மட்டுமே இருந்திருக்கும். அதாவது, 4 சதவீத வருவாய் மட்டுமே கிடைத்திருக்கும்.
இங்கே நடந்திருக்கும் மாயத்தைக் கவனித்தீர்களா? சந்தை தள்ளாட்டத்தில் இருக்கும் போது, யூனிட் விலை 45 முதல் 55 வரை தெளிவான திசை தெரியாமல் ஊசலாடியது. குறைந்த விலையில் இருக்கும் போது, அதிக யூனிட்டுகளை வாங்க முடிந்தது.
சந்தை மீண்ட பிறகு, அதே யூனிட்டுகளின் மதிப்பு உயர்ந்துவிட்டது. இன்னொரு அம்சத்தை கவனித்தீர்களா? இந்த நபர் வாங்கிய அத்தனை யூனிட்டுகளின் சராசரி விலையான 47.95 என்பது, சந்தை மீண்ட பிறகு உள்ள மதிப்பை விட மிகவும் குறைவு.
சந்தை சரிகிறதே என்று யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தால், இந்த முதலீட்டாளருக்கு இவ்வளவு யூனிட்டுகளும் கிடைத்திருக்காது; அவற்றின் மதிப்பு இவ்வளவு அதிகமாக உயர்ந்திருக்கவும் செய்திருக்காது.
இந்த ரூபாய் மதிப்பு சராசரி என்பதன் சூட்சுமம் இது தான். அது, சராசரியை விட குறைந்த விலையில் உங்களை யூனிட்டுகளை வாங்க வைக்கிறது.
உணர்ச்சியை நீக்குதல்
எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடு, ஏன் பலன் தருகிறது என்பதற்கு இன்னொரு காரணம், அந்த முடிவுக்குப் பின்னே இருக்கும் பதற்றம், வருத்தம் உள்ளிட்ட உணர்ச்சியை நீக்குதல். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், எஸ்.ஐ.பி., உணர்ச்சியை சமப்படுத்திவிடும்.
இப்படிப் பாருங்கள்… சந்தை தள்ளாட்டத்தில் அபாயத்துடன் இருக்கும் போது, ரூபாய் மதிப்பு சராசரி என்ற அணுகுமுறை உங்களுக்கு கூடுதல் யூனிட்டுகளை மிக வேகமாக சேர்த்துத் தரும்.
அதே காளை ஓட்ட நேரத்தில், அந்த யூனிட்டு களின் மதிப்பு உயர்ந்து, உங்கள் மியூச்சுவல் பண்டு போர்ட்போலியோ பச்சையில் ஒளிரும் போது, ஒரே கொண்டாட்டம் தான்.
அதேசமயம் யூனிட்டுகளும் சேர்ந்துகொண்டிருக்கும். ஆனால், முந்தைய வேகத்தில் இருக்காது. இப்போது விலை உயர்ந்திருக்கும் என்பதால், குறைவான யூனிட்டுகளே சேரும்.
இந்த இடத்தில் தான் அடுத்த சூட்சுமம் வெளிப்படும். அதாவது, முதலீட்டாளர்கள், எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் முதலீட்டைத் தொடர்வர்.
அதாவது சந்தை விழுந்துவிட்டதே; வெளியேறிவிடுவோமா என்றோ, சந்தை மிக அதிகமாக இருக்கிறதே; விற்றுவிடலாமோ என்றெல்லாம் கவலை கொள்ளாமல், தொடர்ந்து எஸ்.ஐ.பி.,யில் பணம் போட்டு வருவர்.
சந்தை ஏறினால் என்ன? விழுந்தால் என்ன? என் பணி, எஸ்.ஐ.பி.,யைத் தொடர்வதே என்ற பற்றற்ற மனநிலையோடு தொடர்ந்து முதலீடு செய்து வருபவர்களுக்கு, எஸ்.ஐ.பி., லாபத்தை வாரிக் கொடுக்கும்.
ஆனால், உணர்ச்சிக்கு இடம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் போடலாமா வேண்டாமா என்று யோசித்தபடி தத்தளிப்பவர்களுக்கு, லாபம் கண்ணாமூச்சி காட்டி மறைந்துவிடும்.
எஸ்.ஐ.பி., முறையில் பணம் போடுவது என்பது, தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது மாதிரி, வியர்வை வெளியேறுவது மாதிரி, கண் சிமிட்டுவது மாதிரி அனிச்சை செயலாக இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் யாரும் யோசித்துச் செய்வதில்லை. காரண, காரியம் அறிந்து செய்வதில்லை. மாறாக, அவை இயல்பாக, தன்னிச்சையாக நடைபெறுகின்றன.
அதேபோல் தான் எஸ்.ஐ.பி., போடுவதும். மாதாமாதம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி., போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் ஓடுவது மாதிரி சரளமாக, நிற்காமல், தடுமாற்றம் இல்லாமல் ஓட வேண்டும்.
கொஞ்ச ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தால், அங்கே செல்வவளம் அல்ல செல்வ கடலே உருவாகியிருக்கும். நீங்கள் எவ்வளவு அள்ளினாலும், குறையவே குறையாக கடல் அது. இதற்கு அடிப்படை, 'உணர்ச்சியை நீக்குதல்'.
செல்வக் கடல் அதனால், மேலே சொன்ன இரண்டையும் மனதில் வைத்துக்கொண்டு, எப்படி எஸ்.ஐ.பி.,யை வைத்து செல்வக் கடலை உருவாக்கலாம்?
மூன்று விதமான எஸ்.ஐ.பி.,களை உருவாக்கிக்கொள்ளுங்கள். முதலாவது அடிப்படை எஸ்.ஐ.பி., இதில் உங்கள் முதலீட்டில் 70 சதவீத பணத்தைப் போடுங்கள். லார்ஜ் கேப், ப்ளெக்ஸி - கேப் திட்டங்களில் விடாமல் முதலீடு செய்து வாருங்கள்.
உத்தி ரீதியிலான எஸ்.ஐ.பி., என்பது இரண்டாவது வகை. இதில் 20 சதவீத முதலீட்டைப் போடுங்கள். மிட்கேப், ஸ்மால் கேப் பண்டுகளில் முதலீடு செய்யுங்கள். சந்தையில் சரிவு இருக்கும் போது, கொஞ்சம் கூடுதல் பணத்தை இதில் போடுங்கள்.
வாய்ப்பு எஸ்.ஐ.பி., என்பது மூன்றாவது. இதில் 10 சதவீத முதலீடு செய்யலாம். சந்தையில் ஒருசில குறிப்பிட்ட துறைகளில் கவர்ச்சியும் ஆர்வமும் ஏற்படும் போது, அந்தத் துறை சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் போட்டு வாருங்கள்.
ஏன் இந்த மூன்று தொகுப்புகள் அவசியம் என்பதைச் சொல்கிறேன். அடிப்படை எஸ்.ஐ.பி., என்பது நிலையானது, அது தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே இருக்கும்.
உத்தி ரீதியிலான முதலீடு என்பது, சந்தையில் ஏற்படும் சரிவுகளைப் பயன்படுத்திக்கொண்டு யூனிட்டுகளை வாங்குவது. வாய்ப்பு எஸ்.ஐ.பி., என்பது துறை சார்ந்த திடீர் வளர்ச்சியையும் கவனத்தையும் விட்டுவிடாமல் வாங்கிக்கொள்ள உதவும்.

