/
செய்திகள்
/
வர்த்தகம்
/
சேமிப்பு திட்டம்
/
வீட்டுக்கடன் செலவை குறைக்க உதவும் வழிகள்
/
வீட்டுக்கடன் செலவை குறைக்க உதவும் வழிகள்
ADDED : ஜூன் 17, 2024 12:58 AM

குறுகிய கடன் காலத்தை நாடுவது உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் வீட்டுக் கடனுக்கான செலவை குறைக்கலாம்.
சொந்த வீடு வாங்க முயற்சிக்கும் போது வீட்டுக் கடன் செயல்முறையை சரியாக திட்டமிட வேண்டும். கடன் பெற சரியான வங்கியை தேர்வு செய்வது துவங்கி, சாதகமான வட்டி விகிதம் பெறுவது வரை பல அம்சங்கள் முக்கியமாக அமைகின்றன. மேலும், வீட்டுக் கடனுக்கான செலவை குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்கள் இதில் தாக்கம் செலுத்துகின்றன. அதிலும், குறிப்பாக தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என தெரிவித்துள்ளதால், உடனடியாக வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. இந்த பின்னணியில் வீட்டுக் கடனுக்கான செலவை குறைக்கும் வழிகளை பார்க்கலாம்.
கடன் காலம்
கடனுக்கான காலம் 10 ஆண்டு கள் முதல் 20 ஆண்டுகள் வரை அமையலாம். கடன் பெறுபவரின் வயது, வருமானம் என பல அம்சங்கள் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும். பொதுவாக, கடனுக்கான காலம் குறைவாக இருந்தால் மாதத் தவணை அதிகமாக அமையும். கடன் காலம் நீண்டதாக இருந்தால் அதற்கேற்ப மாதத் தவணை குறையும்.
பலரும், மாதத் தவணை சுமையை குறைக்க, நீண்ட காலத்தை நாட விரும்பலாம். எனினும், நீண்ட கால வாய்ப்பை நாடும் போது, மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளில் கூட்டு வட்டி மற்றும் பணவீக்கத்தை கணக்கில் கொண்டால், இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
தவணை உயர்வு
மேலும், ஆரம்ப காலத்தில் அசலை விட அதிகமாக பிடித்தம் செய்யப்படுவதால் பாதிப்பு அதிகமிருக்கும். எனவே, மாதத் தவணை அதிகமாக இருந்தாலும், குறுகிய கால வாய்ப்பை நாடுவது பொருத்தமாக இருக்கும். தவணை சுமையை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
குறைந்த காலத்தை தேர்வு செய்வதன் மூலம், தேவை எனில் பின்னர் கால அளவை நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. துவக்கம் முதல் அதிக தவணை செலுத்துவதன் மூலம், கடனை விரைவாக முடித்து, வட்டி செலவையும் குறைக்கலாம்.
அதிக மாதத் தவணையை தேர்வு செய்ய முடியாதவர்கள், 15 முதல் 20 ஆண்டுகள் வரையான நீண்ட காலத்தை தேர்வு செய்தாலும், வாய்ப்பிருக்கும் போதெல்லாம் தவணைத் தொகையை உயர்த்தும் உத்தியை பின்பற்றலாம்.
குறிப்பாக இளம் வயதினர் என்றால் வருமானம் உயரும் போதெல்லாம் தவணையை உயர்த்தலாம். இது, அசலை குறைத்து அதற்கேற்ப கடன் காலம், வட்டியை குறைக்க உதவும். உபரி தொகையை சேமித்து அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தவும் முயற்சிக்கலாம். வருடாந்திர போனஸ் போன்ற தொகையை இதற்காக பயன்படுத்தலாம்.
வீட்டுக் கடன் என்பது நீண்ட கால பொறுப்பு என்பதால், அதனுடன் காப்பீடு பெறுவது அவசியம். ஆனால், பெரும்பாலும் வங்கிகளால் கடனுடன் காப்பீடு வசதி அளிக்கப்பட்டாலும், தனியே டெர்ம் பாதுகாப்பு நாடுவது ஏற்றதாக அமையலாம்.
வங்கிகள் விற்பனை செய்யும் கடனுடன் தொடர்பு கொண்டது என்பதால், வரம்புகள் கொண்டது. கடனை வேறு வங்கிக்கு மாற்றினால் காப்பீட்டை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, தனியாக காப்பீடு பெறுவது ஏற்றதாக அமைவதோடு, செலவும் குறையலாம். வட்டி விகித கணக்கீடு அம்சங்களையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.