/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தென்னை நார் பொருட்கள் பரிசோதனைக்கு 25% மானியம்
/
தென்னை நார் பொருட்கள் பரிசோதனைக்கு 25% மானியம்
ADDED : செப் 13, 2024 01:17 AM

சென்னை: தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, பொருட்களின் பரிசோதனைக்கான கட்டணத்தில், 25 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்னை நாரில் தயாரிக்கப்படும் தரமான பொருட்களை மட்டுமே வெளிநாடுகள் இறக்குமதி செய்வதால், தமிழகத்தில் உள்ள தென்னை நார் ஏற்றுமதி நிறுவனங்கள், பரிசோதனை கூடங்களில் பொருட்களை பரிசோதனை செய்ய, 80,000 ரூபாய் வரை செலவு செய்கின்றன.
எனவே, தரமாக தயாரிப்பதை ஊக்குவிக்க, பரிசோதனை கட்டணத்தில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என, சிறுதொழில் துறை அமைச்சர் அன்பரசன், சட்டசபையில் அறிவித்தார். இதை செயல்படுத்தி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் கண்ணன் விடுத்த செய்தி:
மொத்த சோதனை கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது, 20,000 ரூபாய் இதில் எது அதிகமோ அது மானியமாக வழங்கப்படும். தமிழகத்தில் பதிவு செய்த சிறு, குறு நிறுவனங்கள், சர்வதேச தரநிலை உடைய ஆய்வகங்களில், இந்தாண்டு ஜூன் 28 அல்லது அதற்கு பின் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
மானியத்தை கோர சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு செலுத்தப்பட்ட சோதனை கட்டணங்கள், ஜி.எஸ்.டி., உடன் கூடிய விலை பட்டியலுடன் ரசீது அல்லது தொகை செலுத்திய ஆவணங்களை இணைக்க வேண்டும். கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

