/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.515 கோடியில் கோத்ரெஜ் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
/
ரூ.515 கோடியில் கோத்ரெஜ் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ரூ.515 கோடியில் கோத்ரெஜ் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ரூ.515 கோடியில் கோத்ரெஜ் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ADDED : மார் 10, 2025 11:13 PM

சென்னை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் குண்ணப்பட்டில், 27 ஏக்கரில் 'கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்' நிறுவனம், 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது.
இந்த ஆலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அவர் ஆலையை சுற்றிப் பார்த்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்; அத்துடன், தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கலெக்டர் அருண்ராஜ், கோத்ரெஜ் குழும தலைவர் நாதிர் கோத்ரெஜ், நிர்வாக இயக்குநர் சுதிர் சீதாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:
கோத்ரெஜ் நிறுவனம் தன் ஆலையை தமிழகத்தில் அமைத்ததில் மகிழ்ச்சி. இந்நிறுவனம் இங்கு தொழில் துவங்கியது, தமிழகத்தின் மேல் அது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
உலக நிறுவனங்களுக்கு தமிழகம் தான் முதல் முகவரி என்று நீங்கள் வெளிப்படையாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 515 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த ஆலையில், 1,010 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 1,000 குடும்பங்களை வாழ்விக்க இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.
கோத்ரெஜ் உடன், 2023 ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அடுத்த ஐந்து மாதங்களில், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே ஆண்டில், ஆலை துவக்கி வைக்கக்கூடிய நிகழ்வை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கோத்ரெஜ் குழுமத்துக்கு, பல்லாண்டு பாரம்பரியமும், பல லட்சம் நுகர்வோரின் ஆதரவும் இருக்கிறது. தமிழகத்தில் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதிநவீன உற்பத்தி திட்டத்தை கோத்ரெஜ் நிறுவியுள்ளது.
இதன் சிறப்பம்சமாக, 50 சதவீதம் பெண்களுக்கும், திருநங்கை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க இருப்பதற்கு நன்றி.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் உள்ளன. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் இருப்பதால் வேலைவாய்ப்பும் அதிகம் உள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
ரூ.515 கோடி முதலீடு
27 ஏக்கர் இடத்தில் ஆலை
1,010 பேருக்கு வேலைவாய்ப்பு
அடிக்கல் நாட்டி ஒரே ஆண்டில் துவக்கம்