ADDED : ஏப் 20, 2024 10:08 PM

புதுடில்லி:எலான் மஸ்க், இம்மாதம் இந்தியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், இம்மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில், இந்தியாவுக்கு வருவார் எனவும், பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும், எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த வருகையின் போது, அவர் தனது டெஸ்லா மற்றும் 'ஸ்டார்லிங்க்' நிறுவனங்களை, இந்தியாவில் துவக்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவன வேலைகள் காரணமாக அவரது வருகை தள்ளி வைக்கப்படுவதாக, எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
