/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அவ்வப்போது திடீரென்று இறக்கம் வந்து செல்ல கூடும்
/
அவ்வப்போது திடீரென்று இறக்கம் வந்து செல்ல கூடும்
ADDED : மே 25, 2024 08:45 PM

சந்தை பல புதிய உச்சங்களை தொட்ட வாரமாக கடந்த வாரம் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 415 லட்சம் கோடியை எட்டியது
இந்திய குடும்பங்களின் சேமிப்பு, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் வரலாறு காணாத சரிவை பதிவு செய்திருந்த நிலை யில், கடந்த நிதியாண்டில் அதிகரித்திருக் கக் கூடும் என, ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான 'கிரிசில்' கணித்துள்ளது
நடப்பு மே மாதத்தின் முதல் பாதியில், அன்னிய முதலீட்டாளர்கள் 27,258 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதிகபட்சமாக நிதி சேவைகள் நிறுவனங்களிலிருந்து 9,687 கோடி ரூபாய் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களிலிருந்து 5,574 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்
கடந்த நிதியாண்டில், நாட்டில் முறையான வேலை வாய்ப்புகள் 11.40 சதவீதம் அதிகரித்து, 1.54 கோடியாக இருந்தது. முந்தைய 2022 - 23ம் நிதியாண்டில், இது 1.38 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது
கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளார்ச்சி 6.80 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். மேலும் கடந்த நிதியாண்டுக்கான ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, 7.80 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் 8.60 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளனர். இது, இதற்கு முந்தைய நிதியாண்டிலிருந்த 7.50 லட்சம் கோடி ரூபாயை விட, கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகமாகும்
நடப்பு மே மாதத்தில், நாட்டின் தனியார் நிறுவனங்கள், கடந்த 14 ஆண்டுகளில் அதன் மூன்றாவது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலை உருவாக்கமும் மே மாதத்தில் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரம்
எம்3 பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவு மற்றும் வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
எஸ் & பி / கேஸ்-ஷில்லர் வீட்டு விலை, சிபி நுகர்வோர் நம்பிக்கை, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை, தனி நபர் வருமானம் மற்றும் தனிநபர் செலவினம் போன்ற, சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்தவாரம் செவ்வாயன்று, வர்த்தக நாளின் இறுதியில் 27 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, புதனன்று 68 புள்ளிகள் ஏற்றத்துடனும், வியாழனன்று 369 புள்ளிகள் ஏற்றத்துடனும், வெள்ளியன்று 10 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது
வரும் வாரத்தில், மே மாத எப் & ஓ ஒப்பந்தங்கள் முடிவடைய இருக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டும், வெளிவர இருக்கும் காலாண்டு முடிவுகள், செய்திகள், நிகழ்வுகள், மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவற்றையும் சார்ந்தே, நிப்டியின் நகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே, வர்த்தகர்கள் இவற்றின் மீது ஒரு கண் வைத்து, எச்சரிக்கையுடன், மிகவும் குறைந்த எண்ணிக்கையில், நஷ்டத்தைக் குறைக்க உதவும் குறுகிய அளவிலான ஸ்டாப்லாஸ்களை தவறாமல் உபயோகித்து மட்டுமே வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் பார்த்தால், நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற நிலைமையே தென்படுகிறது. ஏற்றம் தொடர்ந்தாலும், அவ்வப்போது தீடீரென்று இறக்கம் வந்து செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது எனலாம்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 22,566, 22,174 மற்றும் 21,937 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 23,187, 23,418 மற்றும் 23,655 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22,796 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.