'மேஜிக்' ஜவுளி கண்காட்சி அமெரிக்காவில் மாயாஜாலம் நிகழ்த்துமா இந்தியா?
'மேஜிக்' ஜவுளி கண்காட்சி அமெரிக்காவில் மாயாஜாலம் நிகழ்த்துமா இந்தியா?
ADDED : ஏப் 20, 2024 10:05 PM

திருப்பூர்:அமெரிக்காவில், ஆக., 19 முதல் 21 வரை நடக்கும், 'மேஜிக்' சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்று, புதிய வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்கலாம் என, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. ஆயத்த ஆடை இறக்குமதியில் சீனா, 21.82 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. வியட்நாம், வங்கதேசத்துக்கு பின், இந்தியா, 5.32 சதவீத பங்களிப்புடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, 6.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மட்டும், கடந்தாண்டு, 38,367 கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியானது. கடந்த, 2022ல், இது, 49,232 கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், நடைபெற இருக்கும் 'மேஜிக்' கண்காட்சியில், 80 நாடுகளைச் சேர்ந்த, 1,100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி மறைந்து, இயல்புநிலை திரும்பியுள்ளது இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும்.
இந்திய ஏற்றுமதியாளர்கள், அரசு சலுகையுடன் 'மேஜிக்' கண்காட்சியில் பங்கேற்று, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தி தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தி, புதிய வர்த்தக வாய்ப்புகளை குவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, www.aepcindia.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
