ADDED : ஜூலை 22, 2024 01:19 AM

வங்கிகள் அண்மையில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கிரெடிட் கார்டு பயன்பாடு வாயிலாக பெறக்கூடிய பரிசுப்புள்ளி பலனை குறைத்துள்ளது.
கவனமாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு வாயிலாக அதிக பயன் பெறலாம் என சொல்லப்படுவதுண்டு. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும், வங்கிகளால் அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் பரிசு புள்ளிகள் வாயிலாக பெறக்கூடிய பலனும் இதில் அடங்கும்.
ஆனால், இந்த சலுகைகள் தொடர்பாக வங்கிகள் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. கார்டு பரிசுப் புள்ளிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், கார்டு பலன் மீது தாக்கம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளன.
புதிய விலக்குகள்
கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான சலுகைகளும், பரிசுப் புள்ளிகளும் பரவலாக அறியப்பட்டதே. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை, பெரும்பாலான பரிசுப் புள்ளிகள் எந்தவித விலக்குகளும் இல்லாமல் இருந்தன. அவற்றைக் பயன்படுத்த கட்டுப்பாடுகள் இல்லை.
எனினும், ஒரு சில பயனாளிகள் இதைத் தவறாக பயன்படுத்துவதாக தெரிய வந்ததை அடுத்து, வங்கிகள் பரிசுப் புள்ளிகள் மற்றும் இதர சலுகைகள் தொடர்பான விலக்குகளை அறிமுகம் செய்துள்ளன.
இந்த விலக்குகளின் பட்டியல் நீண்டுகொண்டே வருவதால், பயனாளிகள் இவற்றை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான முக்கிய சலுகைகளில் ஒன்றாக விமான நிலையங்கள் 'லாஞ்ச்'களை பயன்படுத்தும் வசதி அமைகிறது. இந்த வசதி அதிகம் பயன்படுத்தப்படுவதால், பண்டிகை காலம் போன்றவற்றில் லாஞ்ச்களில் அதிக பயனாளிகள் குவிகின்றனர். பயனாளிகளுக்கு இந்த வசதி இலவசம் என்றாலும், வங்கிகள் இதற்காக செலவு செய்கின்றன.
எனவே, சில வங்கிகள் இதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. ஆண்டுக்கு எத்தனை முறை இந்த வசதியை அணுகலாம் எனும் கட்டுப்பாடு தவிர, குறிப்பிட்ட அளவு செலவு செய்ய வேண்டும் எனும் நிபந்தனையையும் கொண்டு வந்துள்ளன.
சலுகைகள் மாற்றம்
இதேபோல பரிசுப் புள்ளிகளை மாற்றிக்கொள்வதிலும் கட்டுப்பாடுகள் அறிமுகம் ஆகியுள்ளன. மாற்றக்கூடிய புள்ளிகள் அளவு மற்றும் மாற்றுவதற்கான விகிதம் ஆகியவற்றில் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இத்தகைய வரம்புகள் எதுவும் இல்லை என்பதால், வாடிக்கையாளர்கள் விரும்பிய வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பரிசுப் புள்ளிகளை பெறுவதில் இருந்து பல செலவுகளுக்கும் விலக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வாடகை செலுத்த, கல்விக் கட்டணம், தங்க நகை வாங்குவது போன்றவற்றுக்கு கார்டை பயன்படுத்தினால் சலுகைகள் பொருந்தாது.
இந்த கட்டுப்பாடு தவிர ஒரு சில வங்கிகள் வாடகை செலுத்த கட்டணம் வசூலிக்கின்றன. வாடகை செலுத்தும் வசதி, கல்விக் கட்டணம் செலுத்துவது போன்றவை மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது சேவைகள் வாயிலாக நிகழ்கின்றன. இவற்றுக்கு வங்கிகள் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கின்றன.
எனவே, வங்கிகளும் இதற்காக கட்டணம் வசூலிக்கத் துவங்கியுள்ளன. ஒரு சில வங்கிகள் காப்பீடு பிரிமியம் செலுத்துவது மற்றும் பில்கள் செலுத்துவதையும் பரிசுப் புள்ளிகளில் இருந்து விலக்கியுள்ளன. மாதாந்திர பில் தொகை செலுத்துவதற்கும் ஒரு சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் துவங்கியுள்ளன. எனவே பயனாளிகள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த கட்டுப்பாடுகளையும், விலக்குகளையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
