/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
லாபம் 'ஸ்டாப்லாஸ்' துணையுடன் வர்த்தகம் செய்வது தான் ஒரே வழி
/
லாபம் 'ஸ்டாப்லாஸ்' துணையுடன் வர்த்தகம் செய்வது தான் ஒரே வழி
லாபம் 'ஸ்டாப்லாஸ்' துணையுடன் வர்த்தகம் செய்வது தான் ஒரே வழி
லாபம் 'ஸ்டாப்லாஸ்' துணையுடன் வர்த்தகம் செய்வது தான் ஒரே வழி
ADDED : மே 04, 2024 08:46 PM

கடந்த வாரம்
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் 0.80 சதவீதம் அதிகரித்து, 92.41 கோடியை எட்டியது. மார்ச்சில், 'ஜியோ மற்றும் ஏர்டெல்' நிறுவனங்கள் கூடுதல் வாடிக்கையாளர்களை இணைத்த நிலையில், 'வோடாபோன் ஐடியா' நிறுவனம், வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழந்ததாக செய்திகள் வெளிவந்தன
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில் 5.20 சதவீதமாக சரிந்தது. இதற்கு முந்தைய மாதமான பிப்ரவரியில், வளர்ச்சி 7.10 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில், எட்டு துறைகளின் வளர்ச்சி 7.50 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2022 - 23ம் நிதியாண்டிலிருந்த 7.80 சதவீத வளர்ச்சியை விட குறைவாகும் என தெரிவிக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கும் என்று, என்.சி.ஏ.இ.ஆர்., எனும் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் கணித்து அறிவித்தது. உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஏற்படவுள்ள வளர்ச்சி மற்றும் வழக்கத்தை விட கூடுதலான பருவமழை ஆகியவை இதற்கு உதவும் என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் பயணியர் வாகன விற்பனை 1.80 சதவீதம் அதிகரித்து, 3.38 லட்சமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த விற்பனை, இரண்டு ஆண்டுகள் கழித்து நிலைபெற்றுள்ளதாக, கார் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஏப்ரல் மாதத்தில், 58.80 புள்ளிகளாக சற்றே சரிந்தது. எனினும், கடந்த மூன்றரை ஆண்டுகளில், இரண்டாவது முறையாக தயாரிப்பு துறையின் செயல்பாடுகள், ஏப்ரலில் வேகமாக விரிவடைந்தன. கடந்த மார்ச் மாதத்தில் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 59.10 புள்ளிகளாக இருந்தது
ஓ.இ.சி.டி., என்னும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, நடப்பு நிதியாண்டில் இந்தியாவுக்கான அதன் வளர்ச்சிக் கணிப்பை முன்பிருந்த 6.20 சதவீதத்திலிருந்து 6.60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. வலுவான முதலீடு மற்றும் நிறுவனங்களின் நம்பிக்கை காரணமாக, வளர்ச்சிக் கணிப்பை உயர்த்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
கடந்த நிதியாண்டில், நாட்டின் தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி 45,000 கோடி ரூபாய் என்ற மைகல்லை தாண்டியுள்ளது. மத்திய அரசின் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டமான பி.எல்.ஐ., திட்டம், இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10,500 கோடி ரூபாய் மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள், கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் வெளியானது.
வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., ஒருங்கிணைந்த பி.எம்.ஐ., குறியீடு, தொழில்துறை உற்பத்தி, அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, மிச்சிகன் நுகர்வோர் மனப்பாங்கு, போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று வர்த்தக நாளின் இறுதியில் 223 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 38 புள்ளிகள் இறக்கம், வியாழனன்று 43 புள்ளிகள் ஏற்றம், வெள்ளியன்று 172 புள்ளிகள் இறக்கம் என்ற அளவில் நிறைவடைந்தது
வரும் வாரத்தில் செய்திகள், நிகழ்வுகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவையே நிப்டி செல்லக்கூடிய திசையை தீர்மானிப்பதாக இருக்கும். வர்த்தகர்கள் இவை அனைத்தையும் நினைவில் வைத்து, எச்சரிக்கையுடன், குறைந்த எண்ணிக்கையில், குறுகிய அளவிலான, நஷ்டத்தை குறைக்க உதவும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு மட்டுமே, வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
வெள்ளிக்கிழமை இறக்கத்துடன் சந்தை நிறைவடைந்த போதிலும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் பார்த்தால், நிப்டியில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளதை போன்ற நிலைமையே தென்படுகின்றது. இருப்பினும் அவ்வப்போது இறக்கம் வந்து போகலாம் என்பதே தற்போதைய சூழ்நிலையாக இருக்கிறது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 22,284, 22,093 மற்றும் 21,922 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும் 22,731, 22,986 மற்றும் 23,157 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22,540 என்ற அளவிற்கு மேலே சென்று, அதற்கு மேலேயே தொடர்ந்து வர்த்தகமாகி கொண்டிருக்க வேண்டும்.