/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறு நிறுவன ஐ.பி.ஓ., செபி புதிய கெடுபிடி
/
சிறு நிறுவன ஐ.பி.ஓ., செபி புதிய கெடுபிடி
ADDED : மார் 10, 2025 10:56 PM
புதுடில்லி :சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஐ.பி.ஒ., விதிமுறைகளை 'செபி' கடுமையாக்கியுள்ளது. எஸ்.எம்.இ., எனும் இப்பிரிவு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருவதையடுத்து, நல்ல நிதிநிலையில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிதி திரட்டுவதை உறுதி செய்யும் வகையில், செபி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஐ.பி.ஓ., வருவதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் லாபம், அதாவது வட்டி, வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய லாபம் ஒரு கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மொத்த புதிய பங்கு வெளியீட்டில், பங்குதாரர்களின் பங்கு விற்பனை அதிகபட்சம் 20 சதவீதமாக மட்டுமே இருக்க முடியும்.
சில்லரை முதலீட்டாளர்களின் நலனைக் காக்கும் விதமாக, குறைந்தபட்ச விண்ணப்ப வரம்பு இரண்டு தொகுப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, திரட்டப்படும் நிதி பயன்பாடு, நிறுவனர்களின் பங்கு விற்பனை, நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 240 சிறு நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டு, 8,700 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டின. இது, 2023ல் திரட்டப்பட்ட 4,686 கோடி ரூபாயை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.