/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
விரைந்து தொழில் துவங்க முதலீட்டாளர்களுடன் பேச்சு
/
விரைந்து தொழில் துவங்க முதலீட்டாளர்களுடன் பேச்சு
ADDED : ஜூலை 07, 2024 01:42 AM

சென்னை:தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், விரைந்து தொழில்களை துவக்க தேவைப்படும் உதவி குறித்து, மாவட்ட வாரியாக முதலீட்டாளர்களுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, சென்னையில் இந்தாண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது.
உற்பத்தி, எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில், பல நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில், 5,068 சிறு நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அவற்றில், சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு, 38,811 கோடி ரூபாய்; நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 22,609 கோடி ரூபாய்; குறு நிறுவனங்களின் பங்கு, 2,152 கோடி ரூபாய்.
மேற்கண்ட தொழில் நிறுவனங்கள், தங்களின் தொழில்களை விரைந்து துவங்க தேவைப்படும் உதவிகள் தொடர்பாக, தொழில் துறை அதிகாரிகள், முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிறு, குறு பிரிவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல், ஜவுளி உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
ஒப்பந்தம் செய்த முதலீட்டாளர்கள் விரைந்து தொழில் துவங்க, அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்து, மண்டலம் வாரியாக பேச்சு நடத்தப்படுகிறது.
வேலுாரில் சில தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழகம் முழுதும் நடத்தப்பட்டு, ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் விரைவில் தொழில்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.