/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வரும் வாரத்தில் செய்திகள், நிகழ்வுகளே 'நிப்டி'யின் நகர்வை தீர்மானிக்கும்
/
வரும் வாரத்தில் செய்திகள், நிகழ்வுகளே 'நிப்டி'யின் நகர்வை தீர்மானிக்கும்
வரும் வாரத்தில் செய்திகள், நிகழ்வுகளே 'நிப்டி'யின் நகர்வை தீர்மானிக்கும்
வரும் வாரத்தில் செய்திகள், நிகழ்வுகளே 'நிப்டி'யின் நகர்வை தீர்மானிக்கும்
ADDED : செப் 08, 2024 01:26 AM

கடந்த வாரம்
நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நான்கு மாத உச்சத்தை எட்டியது. கடந்த ஜூலையில் 60.30 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை வளர்ச்சி, ஆகஸ்டில் 60.90 புள்ளிகளாக அதிகரித்தது. புதிய ஆர்டர்களும், தேவையும் அதிகரித்ததே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், ஆகஸ்ட் வரையிலான 12 மாதங்களில், பங்கு சார்ந்த திட்டங்களில் 3.30 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, செபி தரவுகள் தெரிவிக்கின்றன
உலக வங்கி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்பை, முன்பிருந்த 6.60 சதவீதத்திலிருந்து, தற்போது 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. விவசாயத் துறை வளர்ச்சி, தனியார் நுகர்வு, ஊரக பகுதிகளில் தேவை அதிகரிப்பு ஆகியவை வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்துள்ளது
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில், அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் 15 துறைகளில் 30,845 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். அதிகபட்சமாக நுகர்வோர் பொருட்கள் துறையில் 5,297 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகள், 47.80 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 1.34 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. சேவைகள், கணினி, தொலைத் தொடர்பு, மருந்தகம் துறை சார்ந்த பங்குகளில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 56.76 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன
வரும் வாரம்
தொழில்துறை உற்பத்தி, பணவீக்க விகிதம், பயணியர் வாகன விற்பனை எண்ணிக்கை, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
• பணவீக்க விகிதம், உற்பத்தியாளர்கள் விலை குறியீடு, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 42 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று ஒரு புள்ளி ஏற்றத்துடனும்; புதனன்று 81 புள்ளிகள் இறக்கத்துடனும், வியாழனன்று 53 புள்ளிகள் இறக்கத்துடனும், வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 292 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 383 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
உலக சந்தைகள் காணும் ஏற்ற இறக்கங்கள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றின் தாக்கமே சந்தையின் குறுகிய கால போக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் படி பார்த்தால், சென்ற வார இறுதியில் நிப்டி ஏறுவதற்கு தயங்கும் சூழலில் இருப்பதைப்போன்ற நிலைமை உருவாகியுள்ளது. செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே, நிப்டியின் அடுத்த வார நகர்வை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற தெளிவற்ற சூழ்நிலைகளில், டெக்னிக்கல் அனாலிசிஸ் கொண்டு கணிக்கப்படும் கணிப்புகள், தவறாகிவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை நினைவில் கொண்டு, வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 24,658, 24,463 மற்றும் 24,260 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 25,190, 25,528 மற்றும் 25,731 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,996 என்ற அளவிற்கு மேலே சென்று, தொடர்ந்து வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.