/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
லாபம் வரும் வாரத்திலும் ஏற்ற, இறக்கங்களுக்கு பஞ்சம் இருக்காது
/
லாபம் வரும் வாரத்திலும் ஏற்ற, இறக்கங்களுக்கு பஞ்சம் இருக்காது
லாபம் வரும் வாரத்திலும் ஏற்ற, இறக்கங்களுக்கு பஞ்சம் இருக்காது
லாபம் வரும் வாரத்திலும் ஏற்ற, இறக்கங்களுக்கு பஞ்சம் இருக்காது
ADDED : ஏப் 20, 2024 08:23 PM

கடந்த வாரம்
அன்னிய முதலீட்டாளர்கள், ஏப்ரல் 1 முதல் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 13,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்திய சந்தைகளில் செய்திருந்தனர் என்ற செய்தி திங்களன்று வெளியானது.
கடந்த காலாண்டில், நாட்டில் உள்ள ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது என்ற செய்தி செவ்வாயன்று வெளியானது.
2024 -- 25 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.80 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது என்ற செய்தி புதனன்று வெளியானது.
கடந்த நிதியாண்டில் மொத்தமாக 1.28 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மூலதன செலவுகளை அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன என்ற செய்தி வெள்ளியன்று வெளியானது.
வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு நிலவரம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
எஸ்., அண்டு பி., குளோபல் பி.எம்.ஐ., குறியீடு, எஸ்., அண்டு பி., குளோபல் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறீயீடு, புதிய வீடுகள் விற்பனை எண்ணிக்கை, நீடித்த நுகர்வு பொருட்களுக்கான ஆர்டர்கள், காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம், புதிய மற்றும் தொடரும் வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, தனிநபர் வருமானம் மற்றும் செலவுகள், மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
வரும் வாரத்தில், ஏப்ரல் மாதத்துக்கான எப்., அண்டு ஓ., ஒப்பந்தங்கள் காலாவதியாக இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று, வர்த்தக நாளின் இறுதியில் 246 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 124 புள்ளிகள் இறக்கம், வியாழனன்று 152 புள்ளிகள் இறக்கம், வெள்ளியன்று 151 புள்ளிகள் ஏற்றம் என்ற அளவில் நிறைவடைந்தது.
செய்திகள், நிகழ்வுகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவையே வரும் வாரத்தில் நிப்டியின் நகர்வுகளை தீர்மானிப்பதாக இருக்கும். வர்த்தகர்கள் இவற்றை மனதில் கொண்டு, எச்சரிக்கையுடன் மிக மிக குறைந்த எண்ணிக்கையில், மிகவும் குறுகிய அளவிலான, நஷ்டத்தை குறைக்க உதவும் 'ஸ்டாப்லாஸ்'களை வைத்துக்கொண்டு மட்டுமே வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
வெள்ளிக்கிழமை சந்தை நிறைவடைந்த நிலையில், டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் பார்த்தால், நிப்டி திசை தெரியாத நிலைக்கு வந்துவிட்டதை போன்ற சூழல் நிலவுகிற தோற்றமே தென்படுகிறது. ஆனாலும், கடந்த வாரத்தில் சந்தையில் வந்த இறக்கத்தை கணக்கில் வைத்து பார்த்தால், வேகமான ஏற்ற இறக்கங்களுக்கு, வரும் வாரத்திலும் பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. ஏப்ரல் மாத எப்., அண்டு ஓ., ஒப்பந்தங்கள் வரும் வாரத்தில் காலாவதியாக இருப்பதால், அதை ஒட்டிய நகர்வுகளும் சந்தையில் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 21,807, 21,468 மற்றும் 21,219 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 22,457, 22,767 மற்றும் 23,015 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22,117 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகி வர வேண்டும்.

