
பஜாஜ் பைனான்சுக்கு அனுமதி
'பஜாஜ் பைனான்ஸ்' நிறுவனத்தின் இரண்டு கடன் திட்டங்களுக்கு விதித்திருந்த தடையை, ரிசர்வ் வங்கி விலக்கிக் கொண்டுள்ளது. 'இ காம்' மற்றும் 'இன்ஸ்டா இ.எம்.ஐ., கார்டு' எனும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் இரண்டு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதை தடை செய்து, ரிசர்வ் வங்கி கடந்தாண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழங்குதல் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக, பஜாஜ் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
2000 ரூபாய் நோட்டுகள்
97.76 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் 19ம் தேதி புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அன்றைய தேதியில் மொத்தம் 3.56 லட்சம் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30 நிலவரப்படி, 7,961 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வரவில்லை என்றும், 97.76 சதவீத நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சேவை துறை ஏற்றுமதி
நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில் 1.30 சதவீதம் சரிந்து 2.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் இறக்குமதியும் 2.10 சதவீதம் சரிந்து, 1.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் மாதத்தின் வர்த்தக உபரி 1.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 - 24 நிதியாண்டில், சேவைத் துறையின் ஏற்றுமதி 28.19 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 14.74 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.