/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
/
கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
ADDED : ஏப் 01, 2024 12:35 AM

கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்திருக்கின்றனர். எனினும், கிரெடிட் ஸ்கோரை கண்காணித்து வர வேண்டும் என்பதை பெரும்பாலானோர் செயல்படுத்துவதில்லை. அதாவது, கிரெடிட் ஸ்கோர் எண்ணிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கிரெடிட் ஸ்கோரில் மாற்றம் இருக்கிறதா என்பதையும் தொடர்ந்து அறிய வேண்டும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோரை அறிய வேண்டும் என்கின்றனர். கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக அமையும் கிரெடிட் ஸ்கோரைகண்காணிப்பதால் கிடைக்கும் முக்கிய பலன்களை பார்க்கலாம்.
தவறுகளை அறிதல்:
ஒருவரது நிதி செயல்பாடுகளுக்கு ஏற்ப கிரெடிட் ஸ்கோர் தொடர்ந்து மாற்றி அமைக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் கிரெடிட் ஸ்கோர் விபரம் தவறாகவும் அமையலாம். கிரெடிட் ஸ்கோரை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அதில் தவறுகள் நிகழ்ந்தால், உடனே புகார் செய்து மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கலாம்.
நிதி ஆரோக்கியம்:
கிரெடிட் ஸ்கோர் உங்களின் நிதி ஆரோக்கியம் மற்றும் கடன் தகுதியை உணர்த்துகிறது. கிரெடிட் ஸ்கோர் மூலம் ஒருவர் தன் நிதி நடவடிக்கைகளை திரும்பி பார்த்து, அதில் மாற்றம் தேவையா என அறியலாம். கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் செலுத்தும் அம்சங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படலாம்.
வட்டி பலன்:
கிரெடிட் ஸ்கோர் கடன் தகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்,அதிக கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு நல்ல வட்டி விகிதம் உள்ளிட்ட சலுகைகளை அளிக்கின்றன. எனவே, வலுவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வங்கிகளிடம் உறுதியாக பேசி சலுகைகளை கோரலாம்.
நிதி இலக்கு:
கிரெடிட் ஸ்கோரை அறிவது என்பது நிதி திட்டமிடலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் கிரெடிட் ஸ்கோர் நிதி இலக்குகளை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கலாம். கிரெடிட் ஸ்கோரில் கவனமாக இருப்பதோடு, வலுவான கிரெடிட் ஸ்கோருக்கு உதவும் அம்சங்களையும் பின்பற்ற வேண்டும்.
அடையாள திருட்டு:
டிஜிட்டல் பயன்பாட்டால் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஒருவரது அடையாளத்தை தவறாக பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது. கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதன் மூலம், இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பதை ஒருவர் அறிய முடியும்.

