/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்: நேஷனல் பென்ஷன் திட்டம் வருவாயை கணிப்பது எப்படி?
/
ஆயிரம் சந்தேகங்கள்: நேஷனல் பென்ஷன் திட்டம் வருவாயை கணிப்பது எப்படி?
ஆயிரம் சந்தேகங்கள்: நேஷனல் பென்ஷன் திட்டம் வருவாயை கணிப்பது எப்படி?
ஆயிரம் சந்தேகங்கள்: நேஷனல் பென்ஷன் திட்டம் வருவாயை கணிப்பது எப்படி?
ADDED : ஜன 15, 2024 01:29 AM

நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். வயது 77. பென்ஷன் தவிர வேறு வருமானம் கிடையாது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு, வருமான வரித்துறை வற்புறுத்துகிறது. இது சரியா?
வி.சுப்பிரமணியன்,
குரோம்பேட்டை, சென்னை.
'வருமான வரி சட்டப்பிரிவு 194' உங்களை போன்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறது. 75 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பென்ஷனும், வட்டி வருவாய் ஏதேனும் இருந்தால் அதுவும், ஒரே வங்கியில் இருக்க வேண்டும். வேறு வருவாய் ஏதும் இருக்கக்கூடாது.
அப்படி இருந்தால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே, 'டிக்ளரேஷன்' படிவத்தை வழங்கலாம். வங்கியே, டி.டி.எஸ்., வரிப் பிடித்தம் ஏதேனும் இருக்கிறதா என்பதை சரிபார்த்து, கணக்கை நேர் செய்யும். தனியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.
வங்கிகளின் தங்கப் பத்திரம் வாங்கும் திட்டம் இப்போது உள்ளதா? அதன் பயன்களை விரிவாக சொல்லுங்கள்.
எல்.என்.லட்சுமி காயத்ரி,
வில்லிவாக்கம், சென்னை.
நீங்கள், 'சவரின் கோல்டு பாண்டு' பற்றி தான் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நிதியாண்டின் மூன்றாவது தவணை, கடந்த டிசம்பர் 18 முதல் 22 வரை விற்பனையில் இருந்தது. நான்காவது தவணை, வரும் பிப்ரவரி 12 முதல் 16 வரை விற்பனை செய்யப்படும்.
இந்த தேதியை ஒட்டி, மூன்று நாட்களுக்கு முன்பு வரை உள்ள தங்கத்தின் விலையின் அடிப்படையில், இந்த தங்கப் பத்திரத்தின் விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிதியாண்டின் மூன்று தவணைகளில் தங்கப் பத்திரங்களின் விலை முறையே 5,926, 5,923, 6,199 ரூபாய் என்று இருந்தது.
தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. எட்டு ஆண்டுகள் 'லாக் -இன்' காலம். அதற்குள் தங்கத்தின் விலை இன்னும் அதிகம் உயரும் என்பது தான் எதிர்பார்ப்பு. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளிலேயே, தங்கம் கிராம் 10,000 ரூபாயை தொடக்கூடும் என்றும் கணிக்கின்றனர்.
இதில் இல்லாமல், நீங்கள் வைத்திருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு அரையாண்டும், 2.50 சதவீத வட்டியும் கிடைக்கும். தங்கத்தை ஆபரணமாக வாங்கி பூட்டி வைக்காமல், அதேசமயம் அதன் விலை உயர்வின் பலனை துய்ப்பதற்கு உரிய வழி தான் இந்த தங்கப் பத்திரங்கள்.
நான் புதிதாக வீடு கட்டும்போது, வீட்டுக்கடன், நகைக்கடன், பாலிசி தொகையில் வாங்கிய கடன் என, மூன்று வகையான கடன்களை வாங்கியுள்ளேன். தற்போது என் பழைய வீட்டை லீசுக்கு விடுவதால், ஒரு தொகை கிடைக்கும். அந்தத் தொகையை வைத்து, மேற்கண்ட கடன்களில் எந்த கடனை கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்?
ஈ.தளவாய் குமார்,
திருப்பூர்.
பாலிசி தொகைக்கு நிகராக வாங்கிய கடனைத் தான் நீங்கள் முதலில் செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக, இது குறுகிய கால கடனாகத் தானே இருக்கும்? இதை முதலில் கட்டி விடுங்கள். இரண்டாவது நிலையில், நகைக் கடனை செலுத்திவிடுங்கள்.
வீட்டுப் பெண்களிடம் இருந்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்றோ, பெறாமலோ தான், அவர்களுடைய நகைகளை அடகு வைத்திருப்பீர்கள். மீட்டுக் கொடுத்துவிட்டால், உங்கள் வீட்டுப் பெண்கள் உங்களை வாழ்த்துவர்.
வீட்டுக் கடனில் ஒரு சவுகரியம் உண்டு. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் இ.எம்.ஐ.,யின் வட்டி பகுதியை, ஐ.டி., ரிட்டர்னில் காண்பித்து, கணிசமாக வரி விலக்கு கோர முடியும்.
உங்களுக்கு வரும் பணத்தை வைத்து, ஏதேனும் ஒரு கடனை முழுமையாக அடைக்க முடியுமா என்று பாருங்கள். குறைந்தபட்சம் ஒரு தலைவலி விட்டுவிட்டது; என்றாவது நிம்மதியாக இருக்கலாம், அல்லவா?
என் மகள் வருமான வரி செலுத்துபவர். மேற்படிப்பு படிப்பதற்காக, வேலையை விட்டுவிட்டு, வெளிநாடு சென்றுவிட்டார். இப்போது அவர் ஏதும் சம்பாதிக்கவில்லை. அவர் தொடர்ந்து ஐ.டி., ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?
வி.நாகராஜன்,
கூடல் நகர், மதுரை.
அவர் வருவாய் ஏதும் ஈட்டாததால், வருமான வரி என்று எந்தத் தொகையும் செலுத்த வேண்டியிராது. ஆனால், கட்டு வதற்கு வரி ஏதும் இல்லை என்று தெரிவிக்கும், 'நில்' ரிட்டர்ன் தாக்கல் செய்து வைத்துக்கொள்வது நல்லது.
வருங்காலத்தில் உங்கள் மகள் வேறு ஏதேனும் கடன் கோருவதாக இருந்தாலோ, நிதி நல்கை கோரி விண்ணப்பிப்பதாக இருந்தாலோ, விசா வாங்குவதாக இருந்தாலோ, கடந்த மூன்று ஐ.டி., ரிட்டர்னை கொண்டுவா என்று கேட்பர்.
அப்போது, இந்த 'நில்' ரிட்டர்னை காண்பிப்பது பயனுடையதாக இருக்கும். வருமானத்துக்கு வரி செலுத்துவது என்பது தொடர் நிகழ்வு.
குறிப்பிட்ட ஆண்டில் வருவாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அந்தத் தகவலை அரசுக்கு சொல்லி, ரிட்டர்ன் தாக்கல் செய்துவிடுவது உத்தமம்.
'நேஷனல் பென்ஷன்' திட்டத்தில் மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருகிறேன். இது நல்ல வருவாய் ஈட்டுகிறதா, இல்லையா என்பதை எப்படி கணிப்பது?
பி.வி.சரோஜினி சுவாமிநாதன்,
திருப்பாதிரிபுலியூர், கடலுார்.
டயர் - 1 திட்டத்தில், உங்கள் வயதுக்கும், தேர்வுக்கும் ஏற்ப, ஒரு குறிப்பிட்ட பென்ஷன் பண்டு நிறுவனத்தைதேர்வு செய்து இருப்பீர்கள். அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இனங்களில், உங்கள் முதலீட்டை திறமையாக முதலீடு செய்து வளர்த்து வருவர்.
ஜனவரி 5, 2024 நிலவரப்படி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மேலாளர்கள், 25 சதவீதத்துக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர். காப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள், 8 சதவீதத்துக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர். அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வோர், 7.50 சதவீதத்துக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பல்வேறு பென்ஷன் பண்டுகள், 8 முதல் 15 சதவீதம் வரை வருவாய் ஈட்டியுள்ளன. வெளியே வங்கி வைப்பு நிதி திட்டங்களில் 7 - -7.25 சதவீதம் தான் வருவாய் கிடைக்கும்.
அதைப் பார்க்கும்போது, பென்ஷன் பண்டு நிறுவனங்கள், கூடுதலாக வருவாய் ஈட்டி யிருப்பதை பார்க்க முடியும். இது நீண்டகால திட்டம் என்பதால், தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத அளவுக்கு வளர்ச்சி சாத்தியமாகும் என்றால், உங்கள் முதலீடு ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பென்ஷன் பண்டு எவ்வளவு சதவீதம் வளர்ச்சியை கொடுக்கிறது என்று பார்த்து வாருங்கள். போதுமான வளர்ச்சி இல்லை என்றால், வேறு பென்ஷன் பண்டு நிறுவனத்துக்கும் உங்கள் முதலீட்டை மாற்றிக்கொள்ள முடியும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph:98410 53881