sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்: 'டிஜிட்டல் இ ரூபாய்' வைத்திருந்தால் அதற்கு வட்டி தருவார்களா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: 'டிஜிட்டல் இ ரூபாய்' வைத்திருந்தால் அதற்கு வட்டி தருவார்களா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'டிஜிட்டல் இ ரூபாய்' வைத்திருந்தால் அதற்கு வட்டி தருவார்களா?

ஆயிரம் சந்தேகங்கள்: 'டிஜிட்டல் இ ரூபாய்' வைத்திருந்தால் அதற்கு வட்டி தருவார்களா?

4


ADDED : ஜன 08, 2024 12:59 AM

Google News

ADDED : ஜன 08, 2024 12:59 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் 'ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன்' கார்ப்பரேஷனில், கடன் பத்திரம் வாங்கினேன். அது கடந்த 2022 பிப்ரவரியில் முதிர்வு அடைந்துவிட்டது. அதிலுள்ள தொகையை எவ்வாறு பெறுவது?


ஜே.சி.பத்மநாபன்,

அரசரடி, மதுரை.

இத்தனை மாதங்களுக்குள் அந்தக் கடன் பத்திரத்தின் முதிர்வுத் தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கே வந்து சேர்ந்திருக்குமே? ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன், நீங்கள் கடன் பத்திரத்தை திருப்பித் தர வேண்டும் என்பது அவசியமில்லை. உங்கள் வங்கிக் கணக்குக்கே பணம் வந்துவிடும். அல்லது, காசோலை அனுப்பப்பட்டிருக்கும்.

நீங்கள் கேட்பதைப் பார்த்தால், உங்களுக்கு இன்னும் அந்தப் பணம் வந்துசேரவில்லை போலிருக்கிறதே. நேரடியாக அந்த நிறுவனத்துக்கே இமெயில் எழுதி, விபரம் கேளுங்கள்.

ரயில் பயணத்திற்காக இணையம் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது, வரிச்சலுகைக்காக ஜி.எஸ்.டி., எண் கேட்கப்படுகிறது. தொழில் செய்பவர்கள் ஜி.எஸ்.டி. எண் குறிப்பிட்டு வரிச்சலுகை பெற வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தனி நபருக்கு ஜி.எஸ்.டி. எண் வழங்கப்படுகிறதா?


க.மு.சுந்தரம், சிலமலை, தேனி.

தனிநபராக இருந்து, ஓராண்டில், 20 லட்ச ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்பனை செய்ப வராக இருந்தாலோ, 40 லட்ச ரூபாய்க்கு மேல் சேவைகளை வழங்குபவராக இருந்தாலோ, அவர் ஜி.எஸ்.டி., எண்ணைப் பெற பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒரு நபர் நிறுவனமாக இருந்தாலும் இது பொருந்தும்.

ரயில்வே விஷயத்தில், தனிநபர்கள் பலரும் பல்வேறு சரக்குகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி வைப்பர். ரயிலை தம் வணிகத்துக்குப் பயன்படுத்துவர். இத்தகையவர், இந்த ஜி.எஸ்.டி., சலுகையைப் பெறுவதற்கு ஏதுவாக, அவர்களுடைய ஜி.எஸ்.டி., எண் கேட்கப்படுகிறது.

தபால் ஆபீசில் 'ரெஜிஸ்டர் தபால்' அல்லது 'ஸ்பீட் போஸ்ட்' தபாலில் பெறுபவர், முகவரியில் கண்டிப்பாக மொபைல் போன் எழுத வேண்டும் என்கிறார்கள். பல சமயம் ஏதோ ஒரு மொபைல் நம்பர் போட்டு, ரிஜிஸ்டர் பண்ணி ரசீது கொடுக்கிறார்கள். இப்படி ஒரு புதிய சட்டம் இருக்கிறதா?


எஸ்.ரவீந்திரநாத், கோவை.



இதில் சட்டம் விஷயம் இல்லை, நடைமுறை வசதி தான் பிரதானம். இன்றைக்கு அந்தக் காலம் மாதிரி, முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து தபாலை சேர்ப்பிப்பது எல்லாம் மலையேறிவிட்டது.

இடம் தெரியவில்லை என்றால், உடனடியாக மொபைல்போனில் கூப்பிட்டு, விபரம் அறிந்து கொண்டு போய் தபாலைக் கொடுப்பதற்குத் தான், மொபைல் எண்ணைக் கேட்கிறார்கள். இந்தக் காலத்தின் அற்புத வசதி, மொபைல்போன். அதை தபால் துறை பிரமாதமாக பயன்படுத்துகிறது.

நீங்கள் செல்போன் எண்ணைக் கொடுக்கவில்லை என்றாலும், அவர்கள் தபாலைச் சேர்த்து விடுவர். அவர்களுக்குத் தெரியாத தெருக்களும் இல்லை, தனிநபர்களும் இல்லை. செல்போன் கொஞ்சம் கூடுதல் வசதி. அவ்வளவு தான்.

கூட்டுறவு வங்கி ஒன்றில், பணம் எடுக்கப் போன என் தந்தையை மதிய உணவு நேரம் என்று வெளியே உட்காரச் சொன்னார்கள். பின்னர், மூன்று மணிக்கு மேல் வரச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள். விவசாயிகளை கிள்ளு கீரையாகத் தான் பயன்படுத்துகிறார்கள். கடன் வாங்கத் தானே வருகிறார்கள் என்று நினைக்கிறார்கள். இதற்கு தீர்வு இல்லையா?




எஸ். தங்கவேல்,

மடத்துக்குளம், திருப்பூர்.



உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, உடனடியாக உங்கள் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை, அந்த கூட்டுறவு வங்கியின் மேலாளருக்கும், நோடல் அலுவலருக்கும் தெரிவித்து கடிதம் எழுதுங்கள். உரிய பதில் கிடைக்கும் வரை, மேன்மேலும் இந்தப் புகாரை எடுத்துச் செல்லுங்கள்.

புகார் கொடுக்க, கொடுக்கத் தான் வங்கிகள் திருந்தும். இரண்டு, அந்த வங்கியைப் புறக்கணியுங்கள். உங்களைப் போல் ஊருக்கு நுாறு பேர் செய்தால், வணிகம் பாதிக்கும், வங்கிக்கு வலிக்கும். வாடிக்கையாளர் சேவைகளில் அவர்களுடைய கவனம் திரும்பும்.

'டிஜிட்டல் இ ரூபாய்' வைத்து இருந்தால், அதற்கு வட்டி உண்டா?@

@

வி.பங்கஜவல்லி,

கொடுவாய், திருப்பூர்.

கிடையாது. உங்கள் மணிப்பர்ஸில் வைத்திருக்கும் பணம், எப்படி எந்தவிதமான வட்டியும் ஈட்டித் தராதோ, அதே போல் தான் உங்கள் 'டிஜிட்டல் வாலட்'டில் உள்ள டிஜிட்டல் ரூபாயும் எந்த வட்டியும் ஈட்டாது.

கையில் ரொக்கத்தை வைத்திருப்பதற்குப் பதில், டிஜிட்டல் வடிவில் அதே ரொக்கத்தை வைத்திருப்பதற்கு வழிசெய்வது தான் டிஜிட்டல் இ ரூபாய். இது 'டிஜிட்டல் மணிபர்ஸ்' என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஓய்வூதியதாரர்கள் மாதாமாதம் தங்களுடைய முதலீட்டின் மீது வட்டியை பெறுகிறார்கள். 50,000 ரூபாய்க்கு மேல் வட்டி வந்தால் மட்டுமே வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது படிவம் 15எச் கொடுக்கத் தேவையில்லை என்கிறார்கள். தெளிவுபடுத்துக.


செ.செல்வக்கோ பெருமாள்,

காஞ்சிபுரம்.

ஓய்வூதியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் முதலீடு செய்திருக்கலாம். அங்கேயெல்லாம் வட்டி ஈட்டலாம். அந்த அனைத்து வட்டிகளையும் கூட்டிப் பார்த்து, அது 50,000 ரூபாய்க்குள் இருக்கிறதா, அதிகமாக இருக்கிறதா என்பதை யார் சொல்ல முடியும்? அந்த ஓய்வூதியர் தானே சொல்ல முடியும்? அதனால் தான், வங்கிகள் 15எச் படிவம் கேட்கின்றன.

நீங்களாகவே முன்வந்து எனக்கு 50,000 ரூபாய் தான் வட்டி வருகிறது, டி.டி.எஸ். பிடித்தம் செய்யவேண்டாம் என்று சொல்வது தான் 15எச் படிவம்.

டிசம்பர் 31க்குள் நான் என் பாதுகாப்புப் பெட்டக ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இப்போது என்ன ஆகும்?




எஸ்.பி.ஜெயந்தி,

கோட்டூர்புரம், சென்னை.

கடந்த ஆண்டு நடந்ததுபோல், டிசம்பர் 31க்குப் பின், பாதுகாப்பு பெட்டகத்துக்கான ஒப்பந்த தேதி இன்னும் நீட்டிக்கப்படவில்லை. இனிமேல் நீட்டிக்கப்படுமா என்றும் தெரியவில்லை. கடைசியாக வந்த தகவல்களின்படி, நம் நாட்டில், இன்னும் 20 சதவீதம் பேர், தங்களுடைய பாதுகாப்பு பெட்டக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

இனிமேலும் புதுப்பிக்கவில்லை என்றால், வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்களை பயன்படுத்த முடியாமல், 'ப்ரீஸ்' செய்துவிடலாம்.

அதனால், உடனடியாக உங்கள் வங்கிக்குப் போய், என்ன நடைமுறை என்று கேளுங்கள். அபராதம் ஏதேனும் விதிக்கப்பட்டால், அதைக் கட்டிவிட்டு, ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள். பெட்டகம் வேண்டாம் என்றால், பெட்டக கணக்கை மூடிவிடுங்கள்.

ப்ரீஸ் செய்துவிட்டால், அதை மீட்பது இன்னொரு சிரமமான வேலையாக மாறிவிடும். ஜாக்கிரதை.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்


தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்,



pattamvenkatesh@gmail.com

ph: 98410 53881






      Dinamalar
      Follow us