/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்: பங்குகள் வாங்கி நஷ்டம் ஏற்பட்டால் வருமானத்தில் கழிவு கிடைக்குமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: பங்குகள் வாங்கி நஷ்டம் ஏற்பட்டால் வருமானத்தில் கழிவு கிடைக்குமா?
ஆயிரம் சந்தேகங்கள்: பங்குகள் வாங்கி நஷ்டம் ஏற்பட்டால் வருமானத்தில் கழிவு கிடைக்குமா?
ஆயிரம் சந்தேகங்கள்: பங்குகள் வாங்கி நஷ்டம் ஏற்பட்டால் வருமானத்தில் கழிவு கிடைக்குமா?
ADDED : மார் 04, 2024 12:50 AM

பொதுத்துறை வங்கி ஒன்றில் ஆறு கடன்கள் வாங்கி, நான்கு கடன்களை ஒழுங்காக கட்டி முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு மட்டும் பாக்கி. இன்னும் ஓராண்டில் அவையும் முடிந்துவிடும். எனக்கு ஏதாவது தள்ளுபடி தருவரா? கடனை ஒழுங்காக கட்டுபவர்களை ஊக்கப்படுத்த, கடைசி தவணை கட்டும்போது அவ்வாறு செய்தால் என்ன?
டி.இளங்கோவன், திண்டுக்கல்
நீங்கள் கடன் கொடுக்கும் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்களேன். உங்களிடம் கடன் வாங்கியவர் ஒழுங்காக திருப்பிச் செலுத்துகிறார் என்பதற்காக, ஏதேனும் சலுகை காட்டுவீர்களா? அல்லது வாங்கிய கடனை அடைக்கிறார்; அது அவர் கடமை என்று கருதுவீர்களா?
நீங்கள் ஒழுங்காக திருப்பிச் செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையால் தான், உங்களுக்கு ஒரு வங்கி ஆறு கடன்களைக் கொடுத்திருக்கிறது. மேலும், இது அவர்களுடைய பணம் அல்ல; மக்களிடம் இருந்து டிபாசிட்டாக திரட்டிய பணம். அந்த சாதாரணர்களுக்கு உரிய வட்டி கொடுக்கப்பட வேண்டாமா? கடனை ஒழுங்காக கட்டுவது தான் விதி; அது விதிவிலக்கல்ல.
என் 'சிபில்' மதிப்பீட்டை பார்த்தபோது, அதில் இரு சக்கர வாகனத்துக்கு கடன் வாங்கியதாக தவறான ஒரு பதிவு இருந்தது. இதனால், என் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட்டிருந்தது. கடன் வ ழங்கியதாக தெரிவிக்கப் பட்டிருக்கும் நிதி நிறுவனத்திடம் கேட்டால், என்னிடம் இல்லாத க டன் எண்ணை கேட்கின்றனர். கடன் எண்ணை வழங்கா விட்டால், தவறான பதிவை நிதி நிறுவனத்தால் அகற்ற முடியாது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
ஆர்.சரவணன், சென்னை
நுகர்வோருடைய தகராறு தீர்வுக் கென்று உள்ள சிபிலின் வலைதளமான https://www.cibil.com/consumer-dispute-resolution செல்லுங்கள். இங்கே உங்கள் குறைகளை பதிவு செய்தால், அவர்களே கடன் கொடுத்தவர்களிடம் தொடர்பு கொண்டு, தீர்வு பெற வழி செய்து கொடுப்பர் என்று சொல்லப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள்.
ஷேர் மார்க்கெட்டில் லாபம் வந்தால், வருமானத்துக்கு வரி உண்டா? நஷ்டம் வந்தால் வருமானத்தில் கழிவு உண்டா?
வி.ராஜகோபாலன், திருச்சி
ஆமாம். இதில் நீண்ட கால ஆதாய வரி, குறுகிய கால ஆதாய வரி என்று இரண்டு பிரிவுகள் உண்டு. 12 மாதங்களுக்குள் வாங்கிய பங்கை விற்பனை செய்தால், அதில் இருந்து கிடைக்கும் லாபத்துக்கு, 15 சதவீதம் குறுகிய கால ஆதாய வரி செலுத்த வேண்டும். 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால், கிடைக்கும் லாபத்தில், 1 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. மீதமுள்ள தொகைக்கு 10 சதவீதம் வரி உண்டு.
நஷ்டத்திலும் குறுகிய கால நஷ்டம், நீண்ட கால நஷ்டம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இந்த நஷ்டத்தை, குறுகிய கால அல்லது நீண்ட கால ஆதாய வரிக்கு இணையாக காண்பித்து, சலுகை பெறலாம். இது பொதுவான வரையறை தான். இதற்குள்ளும் சிற்சில உப விதிகள் உண்டு.
நீங்கள் பங்குகளை வாங்கி, விற்க ஆரம்பிக்கும்போது, உங்களுக்கு சேவை தரும் புரோக்கரேஜ் நிறுவனங்களே, இத்தகைய கணக்கீடுகளை உங்களுக்கு வழங்குவர்.
வைப்பு நிதிக் காலம் முதிர்வடையும் முன்னரே, டிபாசிட்தாரர் காலமாகி விட்டால் நாமினி, டெபாசிட்தாரரின் இறப்புச் சான்றிதழ் கொடுத்து, முதலீட்டை திரும்ப பெறலாமா ?
உ.முத்துசுவாமி, காஞ்சிபுரம்
பெறலாம். நாமினி நியமித்து இருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. இறப்புச் சான்றிதழ் அளித்தால் போதும். அரசு, தனியார் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அனைத்திலும் இது தான் நடைமுறை.
பொதுவாக டிபாசிட் செய்து முதல் மூன்று மாதங்களுக்குள் அதை முறிக்க வேண்டியிருந்தால், வட்டி ஏதும் கிடைக்காது. சில இடங்களில் இது ஆறு மாதங்கள் வரை கூட இருக்கலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு டிபாசிட்டை முறிக்கிறீர்கள் என்றால், முதலில் ஒப்புக்கொண்ட வட்டியில், 2 முதல் 3 சதவீதம் வரை குறைக்கப்படும்.
உதாரணமாக, ஒரு நிதி நிறுவனத்தில் 8 சதவீத வட்டிக்கு பணம் போட்டிருந்தால், நடுவில் முறித்தால் 5 அல்லது 6 சதவீத வட்டி தான் கிடைக்கும்.
முதலீட்டாளர் உயிரோடு இருக்கும்போது, மாதா மாதம் வட்டி வாங்கியிருந்தார் என்றால், அவருக்குப் பின்னர், எப்போது அந்த வைப்புநிதியை முறிக்கப் போகிறீர்களோ, அப்போதுள்ள வரை வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, ஏற்கனவே கொடுத்த வட்டி பணம் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை திரும்ப கிடைக்கும்.
ஒருசில சமயங்களில், முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையை விடக் குறைவாகவும் கிடைக்கலாம்.
பொதுவாக காப்பீடு, அஞ்சல சேமிப்பு, வங்கி சேமிப்பு, பென்ஷன் சேமிப்பு மட்டுமே பரவலாக பேசப்படுகிறது. வேறு ஏதேனும் பயன் தரக்கூடிய முதலீடுகள் இருக்கின்றனவா?
எம்.சொக்கன், மதுரை
தேசிய பென்ஷன் திட்டத்தில் சேருங்கள். ஓராண்டில், 50,000 ரூபாய் வரை கூடுதல் சலுகை கிடைக்கும். ஏற்கனவே உள்ள 1.5 லட்சம் ரூபாய் கழிவு இல்லாமல் இது இன்னொரு 50,000. மேலும் இந்தத் திட்டம் நீண்ட காலத்துக்கானது; நல்ல வருவாய் ஈட்டக்கூடியது.
இரண்டு, மருத்துவ காப்பீடான 'மெடிக்ளெய்ம்' உங்களுக்கு 25,000 ரூபாய் வரை சலுகை கிடைக்கும். உங்கள் பெற்றோருக்கும் சேர்த்து காப்பீடு செய்தால், இன்னொரு 25,000 கிடைக்கும். மியூச்சுவல் பண்டுகளில், இ.எல்.எஸ்.எஸ்., என்றொரு திட்டம் இருக்கிறது. இதை வரி சேமிப்பு பண்டுகள் என்றும் சொல்வர்.
இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளை, '80சி' பிரிவின் கீழ் காண்பித்து, வரிச் சலுகை கோர முடியும். ஆனால், இத்திட்டங்களில் இருந்து கிடைக்கும் வருவாய், வழக்கமான வைப்பு நிதி வருவாயை விட அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய இ.எல்.எஸ்.எஸ்., திட்டங்களில், சராசரியாக 20 சதவீதத்துக்கு மேல் 'ரிட்டர்ன்' கொடுக்கப்பட்டுள்ளது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

