/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உலக பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்களையும் கவனியுங்கள்
/
உலக பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்களையும் கவனியுங்கள்
உலக பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்களையும் கவனியுங்கள்
உலக பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்களையும் கவனியுங்கள்
ADDED : செப் 29, 2024 02:26 AM

கடந்த வாரம்
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என, ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 7.20 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து உள்ளது
நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சி, நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில், இம்மாதம் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி அறிக்கையில் தெரிவிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 60.70 புள்ளிகளாக இருந்த எச்.எஸ்.பி.சி., பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 59.30 புள்ளிகளாக குறைந்து உள்ளன
வாகன விற்பனை குறைந்து, இருப்பு அதிகரித்துள்ளது, நகர்ப்புற நுகர்வு குறைந்துள்ளதை பிரதிபலிப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், நடப்பாண்டின் முதல் பாதியில் குறைந்த பொது மூலதன செலவினம், இரண்டாம் பாதியில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது
கடந்த ஜூலையில், கிட்டத்தட்ட 20 லட்சம் பணியாளர்கள் பி.எப்., கணக்கு துவங்கியதாக இ.பி.எப்.ஓ., புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதில், புதிய பி.எப்., உறுப்பினர்கள் 10.50 லட்சமாக இருந்ததாகவும், ஏற்கனவே வெளியேறி மீண்டும் இணைந்த உறுப்பினர்களையும் சேர்த்து, 19.90 லட்சமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம், கடந்தாண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜூன் வரையிலான காலத்தில் 3.20 சதவீதமாக இருந்தது என, தொழிலாளர் கணக்கெடுப்பு தொடர்பான பி.எல்.எப்.எஸ்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குறைந்து வந்த வேலையின்மை விகிதம், கடந்தாண்டு மாற்றம் ஏதுமின்றி உள்ளது
ஜி.எஸ்.டி.,யில், 12 சதவீத வரி விதிப்பில் உள்ள 100 பொருட்களின் வரியை, 5 சதவீதமாகக் குறைப்பது குறித்து, அக்டோபர் 20ல், ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு பரிசீலிக்க உள்ளது. மேலும், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை நீக்குவது தொடர்பான அமைச்சர்கள் குழு, அக்டோபர் 19ல் கூடவுள்ளது.
வரும் வாரம்
உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட அளவு, நடப்பு கணக்கு, வெளிநாட்டு கடன், எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வங்கிகளில் இருந்த வைப்பு நிதி மற்றும் வங்கிகள் வழங்கியுள்ள கடனின் அளவு, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவன பி.எம்.ஐ., குறியீடு, ஜே.ஓ.எல்.டி., வேலை வாய்ப்புகள், வேலையில்லா நபர்களின் அளவு, ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் நிலவரம், எஸ் அண்டு பி., குளோபல் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 148 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி செவ்வாயன்று ஒரு புள்ளி ஏற்றத்துடனும், புதனன்று 63 புள்ளிகள் ஏற்றத்துடனும், வியாழனன்று 211 புள்ளிகள் ஏற்றத்துடனும், வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் கணிசமான அளவில் 37 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் 388 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
சந்தை சார்ந்த செய்திகள், நிகழ்வுகள் மற்றும் உலக பங்குச் சந்தைகள் காண இருக்கும் ஏற்ற இறக்கங்கள், போன்றவையே வரும் வாரத்தில் சந்தையின் நகர்வை நிர்ணயிக்கும் எனலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின் படி பார்த்தால், சென்ற வார இறுதியில் நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் உருவாகியிருப்பதைப் போன்ற நிலைமை தென்படுகிறது. செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே நிப்டியின் அடுத்த வார ஏற்ற/இறக்கங்களை தீர்மானம் செய்யும் வாய்ப்புள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வர்த்தகர்கள் மிகுந்த கவனத்துடனும், குறுகிய அளவிலான, நஷ்டம்குறைக்கும் ஸ்டாப்லாஸ்களைவைத்துக்கொண்டும், மிகவும்குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே வர்த்தகம் செய்வது,நல்லதொரு வர்த்தக ரீதியிலான உத்தியாக இருக்கும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 25,925, 25,671 மற்றும் 25,507 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 26,355, 26,531 மற்றும் 26,695 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 26,101 என்ற அளவுக்கு கீழேபோகாமல் தொடர்ந்து வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.