/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தங்க நகைக்கடன் விதியில் திருத்தம் பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்
/
தங்க நகைக்கடன் விதியில் திருத்தம் பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்
தங்க நகைக்கடன் விதியில் திருத்தம் பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்
தங்க நகைக்கடன் விதியில் திருத்தம் பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்
ADDED : மார் 18, 2025 10:34 PM

புதுடில்லி:தங்க நகைக் கடனுக்கான விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிராக, தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதுகுறித்து அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
புதிய விதிகளின் படி, வாடிக்கையாளர்கள் கடன் காலத்தின் முடிவில், வட்டியுடன், முழு அசல் தொகையையும் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்திய பின் அடுத்த நாளே புதிய கடனுக்காக தங்கள் நகையை அடமானம் வைக்கலாம் அல்லது கடனை புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே இருந்த விதிமுறைகளில், கடன் காலத்தில் வட்டியை மட்டுமே திருப்பி செலுத்தவும் அனுமதிக்கப்பட்டனர். கடன் காலத்தின் முடிவில், முழு அசல் தொகையையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில், தங்கள் கடன் கணக்கை புதுப்பித்து வந்தனர். தற்போதைய புதிய விதிமுறை, கடன் வாங்குபவர்களுக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு கேள்விக்கு, கடந்த 10ம் தேதி நிதியமைச்சர் பதிலளித்திருந்ததாவது:
தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள், மதிப்பீட்டு பிழைகள் போன்ற அபாயங்களில் இருந்து கடன் வழங்குனர்களை பாதுகாக்க, ஆர்.பி.ஐ.,யின் தற்போதைய அறிவுறுத்தல்களின்படி, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நகை மதிப்பில் 75 சதவீதத்திற்கு மேல் கடன் வழங்க அனுமதிக்கப்படவில்லை.
மேலும், கடனை திருப்பி செலுத்த தவறும் அபாயத்தை குறைக்க, வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து 12 மாதங்களுக்கு மேல் கடன்களை நீட்டிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.