ADDED : ஜூன் 22, 2026 04:06 AM

என் வயது 54; சிறிய வியாபாரம் செய்கிறேன். தற்போது புதிதாக வீடு வாங்கி இ.எம்.ஐ., கட்டி வருகிறேன். மேலும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளேன். இப்போது அதை கொடுக்க வேண்டிஉள்ளது. என் பெண்ணின் திருமணத்துக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை உள்ளது. அதை விற்று விடலாமா அல்லது வங்கியில் அடகு வைத்து கடனை அடைக்கலாமா? இன்னும் 3 ஆண்டுகளில் பெண்ணின் திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது இதே அளவு நகை தேவை. மியூச்சுவல் பண்டில் 10 லட்சம் ரூபாய் உள்ளது. நான் எதை எடுப்பது நல்லது?
- கிருஷ்ணமூர்த்தி, பாடி, சென்னை நகையை விற்க வேண்டாம். மூன்றாண்டுகளில் பெண்ணுடைய திருமணத்தை வைத்துக் கொண்டு நகையை விற்பதில் அர்த்தமில்லை.
அன்று புதிதாக நகை வாங்க போனால், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., என்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். அன்றைய தேதியில் சவரன் என்ன விலை விற்கும் என்றும் சொல்வதற்கில்லை.
நகையை அடமானம் வைப்பதும் புத்திசாலித்தனம் இல்லை. அதற்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் வரை வட்டி கட்ட வேண்டியிருக்கும். மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை விற்று பணம் எடுப்பதுதான் உகந்த முடிவாக இருக்கும். இப்போது அவற்றை விற்றுவிட்டு நண்பர்களிடம் கடனை அடைத்து விடுங்கள்.
கூடவே இன்னொரு வேலை செய்யுங்கள். நகையை அடமானம் வைத்தால் மாதம் 10,000 ரூபாய் வட்டி கட்ட வேண்டியிருக்கும் அல்லவா? அந்த வழியில் பணத்தை புரட்டியதாக கருதி, மாதந்தோறும் நல்லதொரு மியூச்சுவல் பண்டு திட்டத்தில் எஸ்.ஐ.பி., போட்டு வாருங்கள்.
மூன்று ஆண்டு முடிவில், உங்கள் மகள் திருமணத்தின்போது கணிசமான தொகை கையிருப்பு இருக்குமே!
நிதி மேலாண்மை, சொத்து மேலாண்மை, பங்கு சந்தை முதலீடுகள் பற்றி ஏதேனும் குறுகிய கால படிப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.
- என்.வேதமூர்த்தி, கோடம்பாக்கம், சென்னை நிதி மேலாண்மை மற்றும் பங்கு முதலீடுகளை கற்றுக்கொள்ள சிறந்த இடம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ் எனப்படும் என்.ஐ.எஸ்.எம்., இது, 'செபி'யால் நேரடியாக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்.
பங்கு முதலீடு, மியூச்சுவல் பண்டு, நிதி மேலாண்மை தொடர்பான பல்வேறு குறுகிய கால ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை இவர்கள் சொல்லி தருகின்றனர். நாட்டின் நிதித்துறையில் இவர்களது சான்றிதழுக்கு அதிக மதிப்பு உண்டு.
தேசிய பங்கு சந்தையால் நிர்வகிக்கப்படும் என்.எஸ்.இ., அகாடமியில், 'NCFM' (NSE Academy Certification in Financial Markets) எனப்படும் குறுகிய கால நிதி சந்தை படிப்புகள் சொல்லி தரப்படுகின்றன. முற்றிலும் ஆன்லைன் வழியிலேயே படித்து, தேர்வும் எழுதி விடலாம்.
மும்பை பங்கு சந்தையின் பி.எஸ்.இ., இன்ஸ்டிடியூட்டில் குறுகிய கால ஆன்லைன் பயிற்சிகள் உள்ளன. இங்கேயும் சேர்ந்து படிக்கலாம்.
சொத்து மேலாண்மை சற்று வித்தியாசமான படிப்பு. இந்திய அளவில் பல்வேறு நிறுவனங்கள் இதற்கான பாடங்களை நடத்துவதாக சொல்கின்றனர். அவற்றில் எது சிறந்தது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்துறை சார்ந்தவர்களை அணுகி விபரம் கேட்டுக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் இன்றைக்கு தகுதியான நபர்களால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற தரமான காணொளிகள் கிடைக்கின்றன. கொஞ்சம் நேரம் செலவு செய்து இவற்றை நிதானமாக பார்த்து, கொஞ்சம் அடிப்படைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு, மேலே சொன்ன மையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.
பி.எப்., கணக்கும் என்.பி.எஸ்., கணக்கும் ஒன்றா? என் மகனுக்கு என்.பி.எஸ்., கணக்கு இருக்கிறது. அவர் இப்போது ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். அவர்கள் பி.எப்., கணக்கு இருக்கிறதா என்று கேட்டிருக்கின்றனர். அங்கே என்.பி.எஸ்., கணக்கை காண்பித்து அதில் பி.எப்., தொகையை போடச் சொல்லலாமா?
- சரவணன், கோவை இல்லை, தேசிய பென்ஷன் திட்டம் எனும் என்.பி.எஸ்.,சும், பி.எப்., எனப்படும் பிராவிடண்டு பண்டும் முற்றிலும் வெவ்வேறான திட்டங்கள். பி.எப்., தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வாயிலாக நிர்வகிக்கப்படுகிறது.
இது மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கான கட்டாய சேமிப்பு திட்டம். இதற்கென பிரத்யேகமாக யு.ஏ.என்., எண் வழங்கப்படும்.
உங்கள் மகன் புதிய வேலையில் சேர்ந்திருப்பதால், அவர் பணியாற்றும் நிறுவனம் அவருக்கு புதிதாக ஒரு யு.ஏ.என்., எண்ணை உருவாக்கி, புதிய பி.எப்., கணக்கை தொடங்கும்.
அந்த புதிய கணக்கில்தான் நிறுவனத்தின் பங்கும், உங்கள் மகனின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பங்கும் வரவு வைக்கப்படும்.
சில நிறுவனங்கள் பி.எப்.,பை தவிர்த்து, கூடுதலாக தங்கள் ஊழியர்களுக்கு என்.பி.எஸ்.,சிலும் பணம் செலுத்தும் வசதியை, அதாவது கார்ப்பரேட் என்.பி.எஸ்.,ஐ ஒரு சலுகையாக வழங்குகின்றன. இது, சி.டி.சி., யின் ஒரு பகுதியாக இருக்கும்.
ஒருவேளை உங்கள் மகனின் நிறுவனத்தில் இந்த கார்ப்பரேட் என்.பி.எஸ்., வசதி இருந்தால் மட்டும், அவர் தனது தற் போதைய என்.பி.எஸ்., கணக்கு எண்ணை, நிறுவனத்தின் மனிதவள துறையிடம் கொடுத்து, அந்த கூடுதல் தொகையை இதில் வரவு வைக்க சொல்லலாம்.
ஒரு தனியார் வங்கியின் காப்பீட்டு திட்டத்தில் என் மகள் பெயரில் காப்பீடு எடுத்து, 2015ல் கட்டி முடித்தேன். அந்த பாலிசி ஆவணம் காணோம். மேலும் இப்போது அவள் அந்த பாலிசியில் கொடுக்கப்பட்ட முகவரியில் இல்லை. எங்கே இருக்கிறாள் என்று தெரியாது. அந்த பாலிசிக்கான தொகையை நான் பெறுவதற்கு என்ன வழி?
- பி.கிருஷ்ணமூர்த்தி, குரோம்பேட்டை, சென்னை முதலில் நகல் பாலிசி ஆவணத்தை பெற முயலுங்கள். உங்கள் மகளுடைய பெயர், பிறந்த தேதி, நீங்கள் பணம் கட்டிய வங்கி விபரங்களை குறிப்பிட்ட தனியார் வங்கியில் கொடுத்து, பாலிசி எண்ணை கண்டுபிடித்து, நகல் பிரதி வாங்கி கொள்ளுங்கள்.
அந்த பாலிசி பத்திரத்தில் உங்கள் பெயர் நாமினியாக இருக்கிறதா என்று பாருங்கள். இருக்குமானால், காப்பீட்டு நிறுவனத்தை அணுகி, மகள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று கூறி பணத்தை கோரலாம்.
மகள் ஏழு ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், காவல் நிலையத்தில் புகார் அளித்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' (Non-Traceable Certificate) சான்றிதழ் பெற வேண்டும். அதன் வாயிலாக நீதிமன்ற உத்தரவு பெற்று, வாரிசு என்ற முறையில் பணத்தை பெறலாம்.
