/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை
/
கருப்பு திங்கள்: கலங்கடித்த பங்கு சந்தை
UPDATED : ஏப் 08, 2025 12:09 AM
ADDED : ஏப் 07, 2025 11:17 PM

கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், நேற்று, ஒரே நாளில் கடும் வீழ்ச்சியை கண்டன. இந்தியாவில் மட்டுமின்றி; உலக சந்தைகளும் சரிவில் சிக்கின. கடந்த 1987 அக்டோபர் 19ம் தேதி, அமெரிக்க சந்தைகள் கடுமையாக சரிந்ததும், அன்றைய தினம் 'கருப்பு திங்கள்' என வரலாற்றில் குறிப்பிடப்பட்டது. அது போல ஒரு கருப்பு திங்களாக அமைந்தது, நேற்றைய தினம்.
வீழ்ச்சிக்கான காரணங்கள்
1 உலகளாவிய சந்தை வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய பரஸ்பர வரிவிதிப்பு, ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது. இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக அஞ்சி, முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்று வெளியேறினர். அமெரிக்க பங்குச் சந்தைகள் 6 சதவீதமும், சீன பங்குச் சந்தைகள் 10 சதவீதமும், ஜப்பான் பங்குச் சந்தை 8 சதவீதமும் வீழ்ச்சி கண்டன. இவற்றோடு ஒப்பிடுகையில், இந்திய சந்தைகள் 4 சதவீத வீழ்ச்சியே கண்டுள்ளன.
2 வர்த்தக போர் பதற்றம்
அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு, சீனா முதல் நாடாக 34 சதவீத வரி விதித்து, பதிலடி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியன் உள்பட பிற நாடுகளும் வரி விதிப்பை கையில் எடுத்தால், வர்த்தகப் போர் சூழலுக்கு அது இட்டுச் செல்லும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
3 கச்சா எண்ணெய் விலை சரிவு
பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக தேவை குறையும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒரு வாரத்தில் பேரலுக்கு 10 டாலர் வரை குறைந்துள்ளது. அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது சாதகம் என்றாலும், ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதால், அவற்றின் பங்கு விலை சரிவை கண்டன.
4அன்னிய முதலீடு வெளியேற்றம்
இந்திய சந்தைகளில் இருந்து அன்னிய முதலீடு வெளியேறுவது மீண்டும் கவலையளிக்க கூடியதாக மாறி உள்ளது. டிசம்பர் மாத தொடர் வெளியேற்றத்துக்கு பின், கடந்த மாதம் தான் அன்னிய முதலீடுகள் மீண்டும் வர துவங்கின. இந்நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 13,730 கோடி ரூபாய் அளவுக்கு, பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர்.
5 முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆர்.பி.ஐ.,யின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவு நாளை வெளியாக உள்ளது. மேலும், நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் குறித்த அறிக்கைகளும் வெளியாக உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.
நேற்றைய வீழ்ச்சியால் இந்திய கோடீஸ்வரர்களுக்கு ஏற்பட்ட இழப்பு
