ADDED : மே 19, 2026 05:36 AM

யுனைடெட் புரூவரீஸ்
'யு னைடெட் புரூவரீஸ்' நிறுவனம், பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் உள்ள தன் மதுபான தொழிற்சாலையை, ஜூன் 30 முதல் மூட உள்ளதாக அறிவித்துள்ளது. ஒப்பந்த உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் நீண்ட கால குத்தகை ஒப்பந்தம் செய்ததை அடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டாலும், பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மதுபான வினியோகம் தடையின்றி கிடைக்க, இந்த ஒப்பந்தம் உதவும் என்று யுனைடெட் புரூவரீஸ், ஒழுங்குமுறை ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி
மா ருதி சுசூகி நிறுவனம், ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்கோடா பகுதியில், இரண்டாவது ஆலையை அமைத்துள்ள நிலையில், அங்கு கார் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
800 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால், இப்பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலைகளின் உற்பத்தி திறன் 5 லட்சமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 26.50 லட்சமாகவும் அதிகரிக்கும்.
ஜி.இ., ஏரோஸ்பேஸ்
'ஜி. இ., ஏரோஸ்பேஸ்' நிறுவனம், புனேவில் உள்ள தன் உற்பத்தி ஆலையில், 100 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த ஆலையின் மொத்த முதலீடு 510 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிதி, புதிய வெல்டிங் தொழில்நுட்பம், ஆய்வு உபகரணங்கள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுக்காக செலவிடப்படும். இத்திட்டம் இந்தியாவில் உற்பத்தியை வலுப்படுத்துவதுடன், திறன் மேம்பாடு மற்றும் கூடுதல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
