ADDED : மே 27, 2026 12:00 AM

டி.வி.எஸ்., மோட்டார்
ஜெர்மனியின் 'வொர்ட்ஸ்சாப்ட்ஸ்வோச்சே' - பி.சி.ஜி., இணைந்து வெளியிட்டுள்ள உலகளாவிய பங்குகள் பட்டியலில், நுகர்பொருள் துறை பிரிவில் டி.வி.எஸ்., மோட்டார் முதலிடம்
பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், இந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 51 சதவீத சராசரி, ஆண்டு லாபத்தை வழங்கியதற்காக முதலிடம் வழங்கப்பட்டு உள்ளது.
பேக்ட்
மேற்காசிய போர் சூழல் காரணமாக மூலப்பொருட்களின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதால், பேக்ட் நிறுவனம் தனது உரங்களின் விலையை உயர்த்தி உள்ளது. இதன்படி ஒரு 'பேக்டம்போஸ்' உர மூட்டையின் விலை 1,750 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இருப்பில் உள்ள உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும்.
பி.எஸ்.என்.எல்.,
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் பெம்மாசானி
சந்திரசேகர் கூறியுள்ளார். இக்காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 21,000 கோடி ரூபாயில் இருந்து 25,000 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதானி கிரீன் எனர்ஜி
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் குஜராத் மாநிலம் காவ்டா பகுதியில் உலகின் மிகப்பெரிய
பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பை அமைத்துள்ளது. சீனாவுக்கு வெளியே முதல் முறையாக ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, 3.37 கிகாவாட் திறன் கொண்ட இந்த பிரமாண்ட உள்கட்டமைப்பு திட்டம், வெறும் பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பண்டமென்டம்
தொழிலதிபர் நந்தன் நிலேகனியின் 'பண்டமென்டம் பார்ட்னர்ஷிப்' நிறுவனம், ஏ.ஐ., மற்றும் டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க 3,000 கோடி ரூபாய் மதிப்பில் 'எப்.2.ஏ.,' என்ற புதிய முதலீட்டு தளத்தை தொடங்கியுள்ளது. அதிநவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய இந்த மூலதன நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
டாடா சன்ஸ்
மும்பையில் நடைபெற்ற, டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸின் முக்கிய இயக்குநர் குழு கூட்டம் 5 மணி நேரம் நடைபெற்றும், எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்தது. பட்டியலிடப்படாத மற்றும் நஷ்டத்தில் இயங்கும் குழும நிறுவனங்களை மீட்டெடுப்பது குறித்துஇக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
