இந்தியா -- நேபாளம் இடையே டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதி
இந்தியா -- நேபாளம் இடையே டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதி
ADDED : ஜூன் 12, 2026 04:00 AM

புதுடில்லி: இந்தியா மற்றும் நேபாளம் இடையே மக்கள் நேரடியாக பணம் அனுப்பவும் பெறவும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நம் நாட்டின் யு.பி.ஐ., மற்றும் நேபாளத்தின் தேசிய பணம் செலுத்தும் நடைமுறையான என்.பி.ஐ., ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அமலுக்கு வந்துள்ள இந்த வசதி வாயிலாக, இரு நாடுகளின் மக்களும் மொபைல் போன் செயலிகள் மற்றும் டிஜிட்டல் வாலெட்கள் வழியாக நிகழ்நேரத்தில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
சுற்றுலா பயணியர் மற்றும் வணிகர்கள் வெளிநாட்டு நாணய மாற்றம் அல்லது அதிகளவு பணத்தை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறையும்.
மேலும், நேபாளத்தில் உள்ள வணிகர்களுக்கும் இந்திய பயணியரிடமிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக பெறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், எல்லை தாண்டிய பண பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
