ADDED : அக் 07, 2024 12:21 AM

புதுடில்லி:இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைத்து, நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டு 10,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, தற்போது அதன் தேவையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெயை வெளிநாட்டு கொள்முதல் வாயிலாக பூர்த்தி செய்து வருகிறது.
இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கும் நோக்கில், 10,100 கோடி ரூபாய் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அதிக மகசூல் தரும், அதிக எண்ணெய் உள்ள ரகங்களை ஊக்குவிப்பதன் வாயிலாகவும், சாகுபடியை விரிவுபடுத்துவதன் வாயிலாகவும் எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்கப்படும்.
மேலும், உயர்தர விதைகளை உருவாக்க மரபணு திருத்தம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
வருகிற 2030 - 31ம் ஆண்டுக்குள் சமையல் எண்ணெய் உற்பத்தியை, தற்போதுள்ள 12.7 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து, 25.45 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனால் உள்நாட்டு தேவையில் 72 சதவீதம் பூர்த்தியாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
