/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கடந்தாண்டில் பிரகாசித்த தங்க இ.டி.எப். முதலீடுகள்
/
கடந்தாண்டில் பிரகாசித்த தங்க இ.டி.எப். முதலீடுகள்
ADDED : ஜன 11, 2024 11:34 PM

புதுடில்லி:கடந்த 2023ம் ஆண்டில், தங்க இ.டி.எப்.,களில் 2,920 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான 'ஆம்பி' தெரிவித்துள்ளது. இது, கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இப்பிரிவில் சொத்து அடிப்படையும், புதிய முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம்பி தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2022ம் ஆண்டில், தங்க இ.டி.எப்.,களில் 459 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 2023ல் இது 2,920 கோடி ரூபாயாக கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, அதிகபட்சமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,028 கோடி ரூபாய் முதலீட்டை இப்பிரிவு ஈர்த்தது.
தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கையும் 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு 2.73 லட்சம் அதிகரித்து, 49.11 லட்சமாக இருந்தது.
அத்துடன் பண்டுகளால் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பும் கடந்தாண்டு 27 சதவீதம் அதிகரித்து 27,336 கோடி ரூபாயாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் அதிக பணவீக்கத்துக்கு மத்தியில், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதியதும்; வட்டி விகிதங்கள் உயர்வு மற்றும் புவிசார் அரசியல் சூழலுமே தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு முக்கிய காரணம் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்க இ.டி.எப்., முதலீடு, முந்தைய ஆண்டைவிட 2023ல், ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.