/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதியமைச்சகம்
/
வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதியமைச்சகம்
ADDED : ஜன 30, 2024 10:57 AM
புதுடில்லி : வரும் 2024-25ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏழு சதவீதத்தை ஒட்டி இருக்கக்கூடும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
'இந்திய பொருளாதாரம் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, பட்ஜெட்டுக்கு முன் வெளியிடப்படும் பொருளாதார ஆய்வறிக்கை இல்லை என்றும், அந்த அறிக்கை பார்லி., தேர்தலுக்கு பின் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அலுவலக அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள தாவது:
வலுவான உள்நாட்டு தேவை, கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை ஏழு சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சிஅடைய செய்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள் காரணமாகவே, தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகளும், உள்நாட்டு தேவைகளும் அதிகரித்துள்ளன.
உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளில் முதலீடு செய்வதன் வாயிலாக, வினியோகமும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவை ஒன்றிணைந்து, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை வழங்கியுள்ளன.
இதனால், வரும் 2024-25ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதத்தை ஒட்டி இருக்கும். வரும் 2030ம் ஆண்டுக்குள், வளர்ச்சி ஏழு சதவீதத்தை விட அதிகரிக்கக்கூடும். நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழலே கவலை அளிக்கின்ற விஷயமாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.