/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம்
/
பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம்
ADDED : பிப் 08, 2025 10:01 PM

திருப்பூர்:பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் 'டாப் 10' நாடுகள் பட்டியலில், 59 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கடந்தாண்டு சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தி யில் 59 லட்சம் மெட்ரிக் டன்னுடன் நம் நாடு முதலிடம் பிடித்துள்ளது. 57.30 லட்சம் மெட்ரிக் டன்னுடன் சீனா இரண்டாம் இடமும், 39.63 லட்சம் டன்னுடன் அமெரிக்கா மூன்றாவது இடமும், 26.78 லட்சம் மெட்ரிக் டன்னுடன் பிரேசில் நான்காவது இடமும் பிடித்தன.
பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளும் 'டாப் 10' நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பின்தங்கியது
சாகுபடி பரப்பு அதிகம் என்றாலும், மகசூலில் நம் நாடு பின்தங்கி உள்ளது. சீனா, பிரேசில், துருக்கி போன்ற நாடுகளில், ஹெக்டேருக்கு 1,800 கிலோ பருத்தி மகசூல் செய்யப்படுகிறது. இதில், சர்வதேச சராசரி 800 கிலோ. நம் நாட்டில், 460 கிலோ மட்டுமே ஹெக்டேருக்கு சராசரி மகசூல் நடக்கிறது.
உலக அளவிலான பருத்தி சாகுபடி பரப்பில், நம் நாடு, 39 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தும், உலக அளவிலான பருத்தி மகசூலில், 23 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷனான 'டாஸ்மா' தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
நம் தேசப் பொருளாதாரத்தை கட்டமைக்கும் 'வெள்ளை தங்கம்' எனப்படும் பருத்தி சாகுபடியில், மகசூலை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஹெக்டேர் அடிப்படையிலான பருத்தி மகசூல், நம் நாட்டில் மிகக்குறைவாக இருக்கிறது.
வழிவகுக்கும்
இனிவரும் ஆண்டுகளில், ஹெக்டேருக்கு 600 கிலோ என்ற அளவுக்காவது உயர்த்த வேண்டும். அப்போது தான், தன்னிறைவு நிலையை எட்ட முடியும்.
உள்நாட்டுத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும்; விலையும் கட்டுக்குள் இருக்கும். இந்த சூழ்நிலையை உணர்ந்தே, பருத்தி உற்பத்தி மேம்பாட்டுக்கான ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

