ADDED : மார் 30, 2026 01:30 AM

என் மனைவியுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மனைவியின் அம்மா, அப்பா ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். அவர்கள் பெயரில் வங்கியில் பணம், லாக்கரில் நகை உள்ளன. வாரிசுகளில் ஒருவர் வர மறுப்பதால், 'நாமினி' யார் என்பதை சொல்லாமலும், பணம், நகையை எடுக்கவிடாமலும் வங்கியில் இழுத்தடிக்கின்றனர். இதை சரி செய்ய வழி என்ன?
கே.பாலகிருஷ்ணன், மதுரை
எல்லா வாரிசுகளும் வந்தால் தான் நாமினி யார் என்று சொல்வோம் என்று வங்கி சொல்வது, ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு முரணானது. நீங்கள் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை வைத்து, கிளை மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதி பதிவு தபாலில் அனுப்பி வையுங்கள். அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். முறையான பதில் தரவில்லை எனில், வங்கி குறைதீர் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் தரலாம்.
இந்த வகையில் முதலில் நாமினி யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். நாமினி தெரிந்தால், அவர் மட்டும் வங்கிக்கு போய் பணத்தையும், லாக்கர் நகையையும் எடுத்து வரலாம். நாமினி பதிவு செய்யப்படவில்லை என்றால், கொஞ்சம் சிக்கல். வழக்கறிஞரை அணுகி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் கணவரும், மகளும் இணைந்து வங்கி கணக்கு வைத்திருந்தனர். என் கணவர் இறந்ததால், அவர் வாரிசாக நான் கணக்கில் உரிமை பெற்று பணம் பெற முடியுமா? அதே போல் அவர் வைத்துள்ள ஷேர்களிலும் உரிமை எனக்கு உண்டா?
துரை, கோவை
கூட்டுக் கணக்கில் ஒருவரது மரணத்திற்கு பின், அந்த கணக்கின் 'மோட் ஆப் ஆப்பரேஷன்' மற்றும் நாமினேஷன் விபரங்களை பொறுத்தே அடுத்த நடவடிக்கை தீர்மானிக்கப்படும். பொதுவாக, 'எய்தர் ஆர் சர்வைர்' போன்ற முறையில் கணக்கு இருந்தால், உயிரோடு இருக்கும் கணக்குதாரருக்கு, இங்கு உங்கள் மகளுக்கு, வங்கி அந்த தொகையை பெற அனுமதி வழங்கும்.
ஆனால், இதன் பொருள் அந்த பணம் முழுமையும் அவருக்கே சொந்தம் என்பதல்ல. வங்கி வழங்கும் இந்த உரிமை ஒரு நடைமுறை வசதி மட்டுமே. சட்ட ரீதியாக, மறைந்தவரின் பங்கு அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கே செல்ல வேண்டும்.
அதேபோல், டீமேட் கணக்கில் உள்ள பங்குகளும், ஜாயின்ட் ஹோல்டிங் மற்றும் நாமினேஷன் இருப்பதை பொறுத்து முதலில் உயிரோடு இருக்கும் நபரின் பெயரில் மாற்றப்படலாம். ஆனால், இறுதியில் அந்த பங்குகளின் உரிமை, வாரிசுரிமை சட்டங்களின் படியே தீர்மானிக்கப்படும்.
இந்த சூழலில், உங்கள் கணவரின் சட்டபூர்வ வாரிசு நீங்கள் என்பதால், அவரது சொத்துகளில் உங்களுக்கு உரிமை உண்டு. எனவே, முதலில் உங்கள் மகளுடன் பேசி, பரஸ்பர ஒப்பந்தத்தின் வாயிலாக உங்கள் பங்கை பெறுவது நல்லது. ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்டத்தின் வழியே உங்கள் உரிமையை நிலைநாட்ட முடியும்.
நான் மியூச்சுவல் பண்டில் பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ளேன். தற்போது உள்ள போர் சூழ்நிலையில் முழுத்தொகையையும் திருப்பி எடுத்து நிலங்களில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
கா.ராஜகோபால், கோவை
எதுக்கு இந்த ரிஸ்க்? இன்னும் எட்டு அல்லது 12 மாதங்களில் இன்றிருக்கும் நிலை முற்றிலும் மாறிவிடும். அன்று லாபத்தை இழந்துவிட்டோமே என்று வருந்துவீர்கள். பங்கு சந்தையும், அதை சார்ந்துள்ள மியூச்சுவல் பண்டுகளும் ஏற்ற இறக்கத்தை சந்திப்பது இயல்பானது. சந்தை விழும்போது பணத்தை எடுக்கக் கூடாது; முடிந்தால் கூடுதலாக பணம் போட வேண்டும். போர் என்பது தற்காலிகமானது. அமைதி தான் நிரந்தரமானது.
நான் பொதுத்துறை வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் வாங்கி, இ.எம்.ஐ., தொகையை விட சற்று கூடுதலாக செலுத்தி வந்தேன். கடன் சீக்கிரம் அடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இப்படி செய்தேன். ஆனால், பிப்ரவரி 1 முதல், இ.எம்.ஐ., தொகை என்னவோ அதை மட்டும் தான் பிடித்தம் செய்ய வேண்டும் என்று ஆர்.பி.ஐ., சொல்லிவிட்டதாம். அதனால், சரியாக அந்த தொகை மட்டும் பிடித்தம் செய்யப்படுகிறது. இதை பற்றி எந்த விபரமும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லையே?
சி.மாணிக்கம், சென்னை
உங்கள் புரிதலில் சிறு தவறு உள்ளது. இ.எம்.ஐ., பிடித்தம் என்பது 'மேண்டேட்' (NACH Mandate) வாயிலாக தானியங்கி முறையில் நடக்கிறது. சமீபத்திய நடைமுறை மாற்றங்களின்படி, வாடிக்கையாளரின் முன் அனுமதியின்றி, நிர்ணயிக்கப்பட்ட இ.எம்.ஐ-.,யை விட கூடுதலாக வங்கிகள் தன்னிச்சையாக பணம் பிடிக்கக் கூடாது. அதனால், சிஸ்டம் சரியாக இ.எம்.ஐ., தொகையை மட்டுமே பிடிக்கிறது.
ஆனால், நீங்கள் கூடுதலாக செலுத்தும் தொகையை தனியே ஒவ்வொரு மாதமும் உங்கள் வீட்டுக்கடன் கணக்கில் 'பார்ட் பேமென்ட்டாக' செலுத்தி வரலாம். இது, அசல் தொகையில் இருந்தே கழிக்கப்பட்டுவிடும் என்பதால், உங்களுடைய திருப்பிச் செலுத்தும் காலம் அதற்கேற்ப குறைய வாய்ப்புள்ளது.
என் மனைவி தேனி மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி கடந்த 2022ல் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். 2014 முதல் 2019 வரை வருமான வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் வருமான வரி அலுவலகத்திலிருந்து தற்போது வந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் முறையாக வரி செலுத்தி, ரிடர்ன் தாக்கல் செய்து வந்துள்ளோம். அலுவலகத்தில் பிடித்தம் செய்து அவர்கள் வருமான வரி அலுவலகத்திற்கு செலுத்துகின்றனர். தற்போது அங்கு கேட்டாலும் சரியான பதில் கொடுக்க மறுக்கின்றனர். என்ன செய்வது?
சி.ஜானகிராமன், சென்னை
முதலில் பயப்பட வேண்டாம். உங்கள் மனைவியின் சம்பளத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், அதாவது சம்பள பட்டியல், படிவம் 16, வங்கி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை சேகரித்து கொள்ளுங்கள். சம்பள பட்டியலில், 'வருமான வரி பிடித்தம்' செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இருப்பதே போதுமானது.
பின்னர் வருமான வரித்துறையின் இணையதளத்தில் நுழை ந்து, வந்திருக்கும் நோட்டீஸுக்கு எதிராக பதில் அளியுங்கள். அதில், 'சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பிரிவு 205ன் படி என்னிடம் மீண்டும் வரி கேட்க முடியாது' என்பதை குறிப்பிட்டு, உங்களிடம் உள்ள சம்பள பட்டியல் ஆதாரங்களை இணைத்து சமர்ப்பியுங்கள். இந்த நோட்டீசுக்கு சரியான பதில் அளிக்க நல்லதொரு ஆடிட்டரையும் கலந்தாலோசியுங்கள்.
