ADDED : ஜூன் 01, 2026 06:09 AM
புதுடில்லி: பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 'விண்ட்பால்' வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. நிறுவனங்களின் அசாதாரண லாபத்தின் மீது அரசு விதிக்கும் சிறப்பு வரியே 'விண்ட்பால்' வரி ஆகும். இந்த வரி குறைப்பு இன்று (ஜூன் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு 3 ரூபாயில் இருந்து 1.5 ரூபாயாகவும், டீசல் வரி 16.5 ரூபாயில் இருந்து 13.5 ரூபாயாகவும், விமான எரிபொருள் வரி 16 ரூபாயில் இருந்து 9.5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு பெட்ரோல், டீசலுக்கான வரிவிதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.
மேற்காசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து, உள்நாட்டில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதியாளர்கள் மிகை லாபம் பெறுவதை கட்டுப்படுத்தவும் மே 16 அன்று இந்த வரி விதிக்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை அடுத்து, இந்த வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
