மின்சார வாகனத்தை உபயோகியுங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
மின்சார வாகனத்தை உபயோகியுங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மே 19, 2026 05:33 AM

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், எரிபொருள் செலவை குறைக்க, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மேற்காசிய போர் பதற்றத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு புறம் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து வரும் அதே வேளையில், மறுபுறம் ரூபாய் மதிப்பு தொடர் சரிவை கண்டு வருகிறது.
இந்த சூழலில், எஸ்.பி.ஐ., மற்றும் எல்.ஐ.சி., உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலவுகளை குறைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனங்கள் தங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
மேலும், முக்கிய கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் காணொளி வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும். அதே போல தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனைகளில், முடிந்த வரை இணைய வழியில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
