/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வங்கி கடன் வரம்பை 40 சதவீதமாக உயர்த்த பம்ப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
/
வங்கி கடன் வரம்பை 40 சதவீதமாக உயர்த்த பம்ப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
வங்கி கடன் வரம்பை 40 சதவீதமாக உயர்த்த பம்ப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
வங்கி கடன் வரம்பை 40 சதவீதமாக உயர்த்த பம்ப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2025 11:27 PM

கோவை:மோட்டார் பம்ப் உற்பத்தியில், முக்கிய மூலப்பொருளான செம்பு விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான வங்கி கடன் வரம்பை, 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில், 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே மோட்டார் பம்ப் உற்பத்தி துறை, தொடர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
மோட்டார் பம்ப் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான செம்பு விலை, சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், உற்பத்தி பொருளின் விலையை நிர்ணயிக்க முடியாமல், தொழில் துறையினர் திணறி வருகின்றனர்.
இது தொடர்பாக, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் தெரிவித்ததாவது:
செம்பு விலை 25 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், மோட்டார் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பருவமற்ற மழை பொழிவு காரணமாக, மோட்டார் பம்ப்களுக்கான தேவையும் சந்தையில் குறைந்துள்ளது. இதனால், விலையையும் உயர்த்த முடியாத சூழலுக்கு, மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கத்தைப் போல கமாடிட்டி சந்தையில் விலை நிர்ணயம் என்பதால், செம்பு விலை உயர்வில், அரசுகளாலும் ஏதும் செய்ய இயலாது. அதேசமயம், பொருளாதார நெருக்கடியில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்ய முடியும்.
எனவே, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அவற்றின் விற்றுமுதலில், 25 சதவீதம் அளவுக்கு வழங்கப்பட்டு வரும் வங்கி கடன் வரம்பை, 40 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதன் வாயிலாக, பொருளாதார நெருக்கடியை நிறுவனங்களால் சமாளிக்க முடியும். இது தொடர்பாக, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

