/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
காலாண்டு முடிவுகள், நிகழ்வுகள் சந்தையின் திசையை தீர்மானம் செய்யும்
/
காலாண்டு முடிவுகள், நிகழ்வுகள் சந்தையின் திசையை தீர்மானம் செய்யும்
காலாண்டு முடிவுகள், நிகழ்வுகள் சந்தையின் திசையை தீர்மானம் செய்யும்
காலாண்டு முடிவுகள், நிகழ்வுகள் சந்தையின் திசையை தீர்மானம் செய்யும்
ADDED : அக் 20, 2024 02:13 AM

கடந்த வாரம்
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், வங்கிகளின் கடன் -டிபாசிட் விகிதம் 0.70 சதவீதமாக இருந்தது. டிபாசிட் வளர்ச்சி தொடர்ந்து பின்தங்கியே இருந்தது. டிபாசிட்கள் 1.90 சதவீதமும்; கடன் வினியோகம் ஒரு சதவீதமும் உயர்ந்தன. வங்கிகளின் ஓராண்டு ஒப்பீட்டில் டிபாசிட் வளர்ச்சி 11.80 சதவீதமாகவும்; கடன் வளர்ச்சி 12.80 சதவீதமாகவும் இருந்ததாக, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரம் தெரிவித்திருந்தது
வர்த்தக சாதக மனநிலைக்கான குறியீடு, முதல் காலாண்டில் 140.70 புள்ளிகளாக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் 134.30 புள்ளிகளாக சரிவு கண்டதாக, வர்த்தக எதிர்பார்ப்புக்கான ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அலுவலக காலி இடங்கள் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக மிகக் குறைந்தது. அலுவலக இடத் தேவை அதிகரித்ததால், சென்னை, மும்பை, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் வாடகை அதிகரித்தது
வாகன விற்பனை தொடர்ந்து மந்தநிலையை சந்தித்து வருவதால், வினியோகஸ்தர்களிடம் வாகனங்கள் தேங்கி கிடப்பதாக, வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 20.80 லட்சம் 'செடான்' மற்றும் எஸ்.யு.வி.,க்கள் விற்பனையானதாகவும்; பண்டிகைக் காலம் என்பதால் வாகன விற்பனை ஓரளவு அதிகரித்து வருவதாகவும் அச்சங்கம் தெரிவித்தது
கடந்த வாரத்தில் வெளியான உணவுப் பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவாக 9.20 சதவீதத்தை தொட்டது. பூண்டு அதிகபட்சமாக 70.87 சதவீத விலை உயர்வு கண்டது. வெங்காயம் 66.09%, உருளைக்கிழங்கு 64.99%, தக்காளி 42.24%, எலுமிச்சை 37.50%, கேரட் 25.30% என விலை உயர்ந்தன.
வரும் வாரம்@@
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
ஏற்கனவே கட்டுமானம் செய்து முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை எண்ணிக்கை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ் அண்டு பி குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எஸ் அண்டு பி குளோபல் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, புதிய வீடுகள் விற்பனை, வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் உபயோகம் செய்யும் அளவிலான தயாரிப்புகளின் உற்பத்தி, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 163 புள்ளி ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 70 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று 86 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று 221 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 104 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 110 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
வரும் வாரத்தில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து சந்தையின் போக்கில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இது தவிர செய்திகள், நிகழ்வுகள் மற்றும் உலக பங்கு சந்தைகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் போன்றவையும், வரும் வாரத்தில் இந்திய சந்தையில் நடக்க இருக்கும் நகர்வுகளை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கக்கூடும்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின்படி பார்த்தால், சென்ற வார இறுதியிலும் நிப்டியில் இறக்கம் தொடர்வதற்கான சூழல் இருப்பதைப்போன்ற அமைப்புகளே இருக்கிறது. காலாண்டு முடிவுகள், செய்திகள் மற்றும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உலகளாவிய நிகழ்வுகள் போன்றவையே, சந்தை அடுத்து செல்லப்போகும் திசையை தீர்மானம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு, சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில் சரிபாதிக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே, வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 24,544, 24,234 மற்றும் 23,987 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 25,188, 25,522 மற்றும் 25,768 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,878 என்ற அளவிற்கு மேலே சென்று, தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.