/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செயற்கை நுாலிழை, துணிக்கு வரி குறைப்பு ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு
/
செயற்கை நுாலிழை, துணிக்கு வரி குறைப்பு ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு
செயற்கை நுாலிழை, துணிக்கு வரி குறைப்பு ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு
செயற்கை நுாலிழை, துணிக்கு வரி குறைப்பு ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு
ADDED : செப் 07, 2025 01:55 AM

திருப்பூர்:செயற்கை நுாலிழை, துணிக்கான வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், ஆயத்த ஆடை உற்பத்தி வேகமெடுக்கும் என, உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
பாலியெஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இறங்கிய சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கின்றன. பருத்தி ஆடை உற்பத்தியுடன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறினால் மட்டுமே, இந்தியா கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
நுாலிழை மற்றும் துணிக்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டது. ஆயத்த ஆடையாக மாற்றி விற்கும் போது, 5 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது. இதனால், கூடுதலாக செலுத்திய வகையில், 7 சதவீதம் அளவுக்கு வரி தேக்கம் ஏற்பட்டது. இத்தொகையை, 'ரீ பண்ட்' பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், 12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நுாலிழை, துணி, ஆடையின் வரி விதிப்பு சமமாகியுள்ளது. இதனால், செயற்கை நுால் இறக்குமதி செய்து, துணி உற்பத்தி செய்வது அதிகரிக்கும். ஆயத்த ஆடை விலையும் குறையும். சாயம் உள்ளிட்ட 'ஜாப் ஒர்க்' பிரிவுகளும் கூடுதல் தொழில் வாய்ப்புகளை பெற முடியும்.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:
உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு வரி வித்தியாசம், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை சவாலாக மாற்றியது. கூடுதலாக செலுத்திய வரியை, 'ரீ பண்ட்' பெற, ஆறு முதல் ஒன்பது மாதம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜி.எஸ்.டி., அறிமுகமான முதல் மூன்று ஆண்டுகள் 'ரீ பண்ட்' வழங்கவில்லை. இருப்பினும், 2019ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இயந்திரங்கள், கம்ப்யூட்டர் போன்ற முதலீட்டு செலவுகளில் ஏற்பட்ட வரி செலவு, 'ஜாப் ஒர்க்' கட்டணங்களுக்கு செலுத்தி ஜி.எஸ்.டி.,யை, 'ரீ பண்ட்' பெறவே முடியாது. நுால் கொள்முதலில் செலுத்திய கூடுதல் வரியை மட்டும் திரும்பப்பெற முடிந்தது.
தேங்கியுள்ள, கூடுதல் வரித்தொகையை திருப்பி வழங்க வேண்டும். தற்போது, செயற்கை நுாலிழை, துணிக்கான வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், வரி வித்தியாசத்தால், கூடுதல் வரித்தொகை தேக்கமடையாது. இனி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில் மட்டுமல்ல, உள்நாட்டு வர்த்தகத்திலும் தனி இடத்தை பிடிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செயற்கை நுாலிழை, துணிக்கான வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், வரி வித்தியாசத்தால், கூடுதல் வரித்தொகை தேக்கமடையாது. இனி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வேகமெடுக்கும்